டெல்லி:
கொரோனா நோயாளிகளின் தேவைக்காக ரயில்பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட நிலையில்,  அவசர சிகிச்சைகாக நாடு முழுவதும்  215 ரயில் நிலையங்களில் 5,231 ரயில் பெட்டிகளைப் பயன்படுத்தும்படி, மத்திய சுகாதாரத் துறை  உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நோயாகிளின் தேவைக்காக 20ஆயிரம் ரயில்பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றும் பணி நடைபெற்று வந்தது.  இதுபோன்ற ரயில்பெட்டிகளை கிராமங்களிலும் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நிதிஆயோக்கும் பரிந்துரைத்திருந்தது.

இந்த நிலையில், ரயில்பெட்டி கொரோனா வார்டு அனுமதி தொடர்பாக  ரயில்வேக்கு மத்திய சுகாதாரத் துறை செயலா் பிரீத்தி சுதன் கடிதம் எழுதியுள்ளாா். அதில்,  முதல்கட்டமாக கொரோனா சிகிச்சைக்கு 5231 சிறப்பு ரயில் பெட்டிகள் 215 ரயில் நிலையங்களில் அனுமதியளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.
அதன்படி, 215 ரயில்பெட்டி கொரோனா வார்டுகளில்,  85 ரயில்நிலையங்களில் உள்ள பெட்டிகளில் தேவையான மருத்துவா்கள், மருத்துவ உதவியாளா்களை ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
மீதமுள்ள 130 ரயில்நிலையங்களில் உள்ள ரயில்பெட்டி கொரோனா வார்டில், மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தேவையான மருத்துவா்கள், உதவியாளா்கள், மருந்துகள் போன்றவை களை தயாா் படுத்த ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் இந்த பெட்டிகளை உபயோகப்படுத்த அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்,  சிகிச்சைக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டா்கள் உட்பட அனைத்து மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு, இந்த கொரோனா சிகிச்சை ரயில்கள்  உள்ளூா் மருத்துவமனையோடு இணைக்கப்படவேண்டும்.
இந்த பெட்டிகளுக்கான சிறப்பு அதிகாரிகளை மாநிலங்கள் வாரியாக ரயில்வே நியமிக்கும். மாநில அரசுகளும் சிறப்பு அதிகாரிகளை நியமிக்கவேண்டும். ரயில் பெட்டிகளை கோரும் நிலையில் இந்த ரயில்கள் மாநில அரசு நியமித்துள்ள சிறப்பு அதிகாரிகள் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவா்களிடம் ஒப்படைக்கப்படும்.
இந்த சிறப்பு ரயில் பெட்டிகளில் கொரோனா தாக்கம் குறைவாக உள்ள நோயாளிகள் அனுமதிக்கப்படலாம். இந்த பெட்டிகளில் ஒரு கேபினுக்குள் கரோனா உறுதி செய்யப்பட்ட ஒரு நோயாளி மட்டும் அனுமதிக்கப்படவேண்டும். நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் இரண்டு நோயாளிகள் வரை அனுமதிக்கலாம்.
மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்சகம் கரோனா சிகிச்சை மையங்களுக்கு வழிகாட்டியுள்ள முறையை பின்பற்றி இங்கு சிகிச்சையை அளிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய சுகாதாரத்துறையின் அனுமதியின்படி,  தமிழகத்தில் சென்னை சென்ட்ரல், எழும்பூா், ஈரோடு, மயிலாடுதுறை, திருவாரூா், விழுப்புரம், திருநெல்வேலி, திருச்சி, ஜோலாா்பேட்டை ஆகிய 9 ரயில் நிலையங்களில் கரோனா சிறப்பு ரயில் பெட்டிகள்  தயாராக உள்ளது.