சென்னை:  திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளில், பல கோயில்களுக்கு சொந்தமான 52,000 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக  அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோயிலுக்கு சொந்தமான 52 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளது. தமிக  சட்டசபையில் 1985-87ம் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கோயில்களுக்கு சொந்தமாக 5.25 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், 2018-19ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் 4.78 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் 47 ஆயிரம் ஏக்கர் நிலம் எங்கே போனது என்றே தெரியவில்லை.

இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆக்கிரமிப்பு உள்ள கோயில் நிலங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல கோயில் அலுவலர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், ஒவ்வொரு கோயில் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கொண்ட குழு கோயில் நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கையை விரைவுப்படுத்த உத்தரவிட்டார். அதன்பேரில் தற்போதைய நிலவரப்படி கோவில்களுக்கு சொந்தமான 5.30 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் தற்போது வரை 52 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.