புதுக்கோட்டை: தமிழ்த் தேர்வுக்கு 50 ஆயிரம் பேர் ஆப்செண்ட் ஆனது ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும் அவமானம் என கூறிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சொந்த கட்சி நிர்வாகிகளே காவல் நிலையத்திற்குள் புகுந்து அடித்து நொறுக்குவது தான் திராவிட மாடல் என காட்டமாக விமர்சத்தார்.
புதுக்கோட்டையில் கட்சி நிகழ்ச்சிக்காக வந்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் சரமாரியான பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
ஆவின் பால் தட்டுபாடு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், ஆவின் பால் பிரச்சினைக்கு எதிர்க்கட்சி மேல் பழியை போடாமல் அமைச்சர் நாசர் மற்றும் தமிழகஅரசுதான் விவசாயிகள் பிரரச்சினையை தீர்த்து ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்திற்கு தே.மு.தி.க.வின் ஆதரவு எப்போதும் உண்டு. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு அதிகமாக உள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது என்றார்.
நீட் விலக்கு தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், தேர்தல் நேரத்தில் நீட் தேர்வு ரத்து ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று கூறிய உதயநிதி தற்போது அனிதா பெயரில் மருத்துவமனையில் பெயர் பலகை திறந்தால் போதும் என்று நினைக்கிறார். இது கண்டனத்துக்குரியது. அகில இந்திய அளவில் நீட் தேர்வுக்கு ஆதரவு இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் ரத்து செய்ய முடியுமா என்பது ஒரு கேள்விக்குறிதான். நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யாமல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை குழப்பாமல் தமிழக அரசு நீட் பிரச்சினையில் நிலையான, தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பான கேள்விக்கு, ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிட பயந்து பல கட்சிகள் இருந்தபோது தைரியமாக தே.மு.தி.க. போட்டியிட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேர்தலே கிடையாது. இதுவரை தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களை மிஞ்சும் அளவிற்க்கு முறைகேடுகள் நடந்துள்ளது. தே.மு.தி.க. எவ்வளவோ இடைத்தேர்தலை சந்தித்துள்ளது. ஆனால் இதுபோன்ற இடைத்தேர்தலை நாங்கள் பார்த்தது இல்லை. மக்களை ஆடு, மாடுகள் போல பட்டியில் அடைத்து வைத்து கோடி கோடியாக செலவழித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தேர்ந்தெடுக்க வைத்துள்ளனர். தற்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கேள்விப்படும்போது மனது வருத்தமாக உள்ளது. நான் போட்டியிடவில்லை, எனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவர் கூறியபோதும் வம்படியாக இளங்கோவனை தேர்தலில் நிற்க வைத்து உள்ளது தி.மு.க. ஜனநாயகத்திற்கு முற்றிலுமாக ஒரு தேர்தல் நடந்தது என்றால் அது ஈரோடு இடைத்தேர்தல் தான். தேர்தல் ஆணையம் உள்ளதா என்ற கேள்விக்குறி தற்போது எழுந்துள்ளது என்று காட்டமாக கூறினார்.
மேலும் பேசியவர், கலெக்டர் அலுவலகம் முன்பு மாணவர் முட்டிபோட்டு நூதன போராட்டம் சொந்த கட்சி நிர்வாகிகளே காவல் நிலையத்திற்குள் புகுந்து அடித்து நொறுக்குவது, சொந்த கட்சி எம்.பி. வீட்டையே தாக்குதலுக்கு உள்ளாக்குவது தான் திராவிட மாடலா என கேள்வி எழுப்பியவர்,. இதுதான் திராவிட மாடல். பேராசிரியர் ஒருவரை நடுரோட்டில் அடித்து இழுத்துச் சென்று அவர்களிடம் இருந்து நகைகளை பறித்து செல்லும் சம்பவமும் நடந்துள்ளது. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.
கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்குமா? இதற்கு முதலமைச்சர் பதில் கூற வேண்டும். அமைச்சர்கள் பலரின் நடவடிக்கை மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு அவர்கள் நடவடிக்கை உள்ளது,
அதிமுகா பாஜக இடையே ஏற்பட்டுள்ள உரசல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, அ.தி.மு.க. பிளவுபட்டு இருப்பது கட்சியை பலவீனப் படுத்தும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே தி.மு.க.வை வீழ்த்த முடியும். ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு அ.தி.மு.க., பா.ஜ.க. விமர்சனம் செய்து கொள்வது இரண்டு கட்சியின் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் என்றார்.
பிளஸ்டு முதல் தேர்வையே 50ஆயிரம் மாணாக்கர்கள் புறக்கணித்துள்ளனரே என எழுப்பப்பட்ட கேள்விக்கு,. தமிழ்த் தேர்வுக்கு 50 ஆயிரம் பேர் ஆப்செண்ட் ஆனது ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும் அவமானமாக நான் கருதுகிறேன்.தமிழ்நாடு அரசும், துறைசார் அமைச்சரும் ஆய்வு செய்து உண்மையை சொல்ல வேண்டும். மேடை மேடைக்கு தமிழ் தமிழ் என்று பேரும் நிலையில் எங்கே சென்று கொண்டிருக்கிறது தமிழ்நாடு. தமிழை வைத்து அரசியல் செய்யும் தமிழக அரசு, 50ஆயிரம் மாணவர்கள் தமிழ்த்தேர்வை எழுததுதான் திராவிட மாடல் அரசின் சாதனை என்றவர், இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 100 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்விக்கு, தேர்தல் தேதி வர இன்னும் ஓராண்டு உள்ளது. தேமுதிகவை பொறுத்தவரை ஆட்சியாளர்கள் நல்லது செய்தால் அதனை வரவேற்கும் முதல் கட்சி நாங்கள்தான். ஆட்சியை சரியாக செய்யவில்லை என்றால் அதனை தட்டிக்கேட்கும் முதல் கட்சியும் தேமுதிகதான் என்றார்.
திமுக கூட்டணியில் தேமுதிக இருந்தால் ஆளுங்கட்சியாக தேமுதிக இருந்திருக்கும் என விமர்சனம் வந்துள்ளந்தே? என்ற கேள்விக்கு, இக்கரைக்கு அக்கரை பச்சைதான். கேப்டன் அன்று எடுத்த முடிவு மூன்றாவதாக ஒரு மாற்றம் வேண்டும் என்பதுதான். மக்கள் அதனை ஆதரித்து இருந்தால் இந்த கேள்விக்கே இடமிருந்து இருக்காது.