வார்தா புயல் பாதிப்பு: முதல்வர் அறிக்கை!

Must read

சென்னை,
வார்தா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களை  சீரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஓபிஎஸ் கூறினார்.
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் புயல், மழையால் சென்னை மற்றும் திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் பலத்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பாதிப்பு மற்றும் நிவாரணம் குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘வார்தா’ புயல் 12.12.2016 அன்று சென்னையில் கரையைக் கடந்த போது வீசிய சூறாவளிக் காற்றினால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. மின்சார சேவை பெரிதளவில் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளை சீர் செய்ய தமிழக அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளன.
‘வார்தா’ புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சீர்செய்யும் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அரசு ஆலோசகர், காவல் துறை தலைமை இயக்குநர், துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் நான் ஆய்வு செய்தேன்.
இந்த ஆய்வின் அடிப்படையில், ‘வார்தா’ புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித் தொகை மற்றும் உடனடி உள்கட்டமைப்பு சீரமைப்புப் பணிகளுக்கு என 500 கோடி ரூபாயை ஒதுக்கி ஆணையிட்டுள்ளேன்.

இதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 350 கோடி ரூபாய், பெரு நகர சென்னை மாநக ராட்சிக்கு 75 கோடி ரூபாய், மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகைக்கென 10 கோடி ரூபாய், நெடுஞ்சாலைத் துறைக்கு 25 கோடி ரூபாய், நிவாரணப் பணிகளுக்கென காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகங்களுக்கு தலா 10 கோடி ரூபாய், அரசு கட்டடங்களை சீர் செய்ய பொதுப்பணித் துறைக்கு 7 கோடி ருபாய்,
நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கென சுகாதாரத் துறைக்கு 3 கோடி ரூபாய், பால் பண்ணைகளில் ஏற்பட்ட சேதாரங்களை சீர் செய்ய 50 லட்சம் ரூபாய், போக்குவரத்து சமிக்ஞைகளை (டிராபிக் சிக்னல்கள்) சீர் செய்ய காவல் துறைக்கு 5 கோடி ரூபாய், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இதர பூங்காக்கள் ஆகியவற்றின் சீரமைப்புப் பணிகளுக்கு வனத்துறைக்கு 2 கோடியே 50 லட்சம் ரூபாய், பேருந்துகள், பேருந்து பணிமனைக் கட்டடங்கள் மற்றும் பேருந்து முனையங்களில் தற்காலிக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள போக்குவரத்துத் துறைக்கு 2 கோடி ரூபாய் வழங்கப்படும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

More articles

Latest article