சென்னை,
நேற்று நள்ளிரவு முதல் 500ரூபாய், 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்தது, மோடியின் முட்டாள் தனம் எனறு பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
500, 1000 ரூபாய்கள் செல்லாது என்றவுடன் பொதுமக்கள் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் 5ந்தேதிதான் சம்பளம் கொடுப்பது வழக்கம், 5ந்தேதி அல்லது 7ந்தேதிதான் சம்பளம் பட்டுவாடா நடைபெறும். சம்பளம் கொடுக்கும் நிறுவனமும், சில்லரை நோட்டுகளுக்கு பதிலாக 500ரூபாய், 1000 ரூபாய்களையே கொடுப்பார்கள்.
சம்பளம் வாங்கும் ஊழியர்களும் தினசரி பரிவர்த்தனைக்கும், பர்சில் சேமித்து வைக்கவும் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை விரும்பி வாங்கிக்கொள்வர்.
ஆனால், நேற்று திடீரென 500, 1000 ரூபாய்க்ள செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தவுடன் அவர்களின் நிலைமை படுமோசமானது. இரவோடு இரவாக ஏடிஎம் சென்டருக்கு சென்றால் அங்கே நூற்றுக்கணக்கான மக்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள்…
என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.
அன்றாடை தேவைகளுக்கு பணத்தை செலவு செய்ய முடியாமலும், பொருட்கள் வாங்க முடியாமலும், மோடி முட்டாள்தனமாக, பணம் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளார் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
முதலில் 1000 ரூபாயை மட்டும் இவ்வாறு அறிவித்து விட்டு பின்னர் படிப்படியாக 500 ரூபாய் போன்ற மற்ற நோட்டுகள் செல்லாது என்று அறிவித்திருந்தால் பொதுமக்கள் இவ்வளவு கஷ்டப்பட தேவையிருக்காது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
பெரும்பாலானே ஏழை எளிய மக்கள் 500 ரூபாய் நோட்டுகளை , அவசர தேவைக்காக சேமிப்பது வழக்கம். தற்போது அந்த நோட்டுகளை எடுத்துக்கொண்டு கடைகடையாய் அலைவது பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.
எந்த கடையில் சென்று பொருள் கேட்டாலும், 500 ரூபாய் நோட்டு என்றால், வாங்க மறுத்து விடுகிறார்கள். கையில் பணம் இருந்தும் அதை உபயோகப்படுத்த முடியாமல், நாயின் கையில் கிடைத்த முழுத்தேங்காய் போல, பணம் இருந்தும் அதை உபயோகப்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் சிலரிடம் கருத்து கேட்டோம்… அவர்கள் கூறியதாவது
இதுகுறித்து மளிகை கடைக்காரர் கூறியது,
நேற்று இரவு திடீரென 500 ரூபாய், 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்து விட்டதால், நான் காலையில் இருந்து இப்போது வரை விற்பனை செய்து வைத்திருந்த பணத்தை கொண்டு இரவு மொத்த வியாபார கடைக்கு சென்று சரக்கு வாங்க நினைத்தேன். ஆனால், அவர்கள் 500 ரூபாய் தாள்களை வாங்க மறுத்து விட்டார்கள். அதன்பிறகு தான் எனக்கு தெரியும். நான் கடையில் இருந்ததால், அரசு அறிவிப்பு எனக்கு தெரியாமல் போய் விட்டது. என்னிடமே இரவு ஒருசிலர் வந்து 500 ரூபாய்க்கு சில்லரை வாங்கி சென்றார்கள். தற்போது என்னிடம் பணம் இருந்தும் கடையில் வியாபாரத்துக்கு பொருட்கள் வாங்க முடியாத நிலையில் செய்வதறியாது இருக்கிறேன் என்றார்.
டீக்கடை நாயர் கூறியது,
நேற்று இரவு 9 மணி அளவில்தான் அரசின் இந்த அறிவிப்பு எனக்கு தெரியும். காலையில் பால் வாங்க 500 ரூபாய் கொடுத்தேன். ஆனால், பால் மொத்த வியாபாரியோ பணத்தை வாங்க மறுத்து விட்டார்.. பின்னர் சேர்த்து வாங்கிக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.. அதனால் தற்போது கடையை திறந்து வியாபாரம் செய்து வருகிறேன்…. அவர் பால் தர முடியாது என்று சொல்லி இருந்தால்.. இன்று எனது பாடு திண்டாட்டம்தான், கடையை மூட வேண்டிய நிலைதான் ஏற்பட்டிருக்கும் என்று கூறினார்.
ஆட்டோ ஓட்டுநர் குமார்,
நான் இரவு சவாரியில் போரூருக்கு சென்று வந்தேன். சவாரி கூலியாக 350 ரூபாய் வந்தது. வண்டியில் சவாரி வந்தவர் 500 ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்தார். நான் வாங்க மறுத்தேன். அவர் என்னிடம் வேறு பணம் இல்லை… வேணுமென்றால் வாங்கிக்கொள் என்று கறாராக கூறிவிட்டார்… என்ன செய்வதென்று தெரியவில்லை… 500 ரூபாயை வாங்கி வைத்துள்ளேன்… மாற்றுவதற்கு என்ன பாடுபடப் போகிறேனோ தெரிய வில்லை என்று ஆதங்கத்துடன் கூறினார். இந்த பணத் தொல்லையால் இரண்டு நாட்களுக்கு எனக்கு சவாரி போச்சு… அன்றாடங்காய்சிகளான எங்களது வாழ்க்கை அரசுக்கு கேலிக்குறியதாக விட்டது என்று அங்கலாய்த்தார்.
பெரும்பாலான ஆட்டோக்கள், கால்-டாக்சிகள் நீண்ட தூர பயணங்களை இதன் காரணமாக தவிர்த்து விடுகின்ற னர்.
ஓய்வுபெற்ற ஆசிரியர் மைக்கேல்,
மோடியின் இந்த உடனடி அறிவிப்பு பொதுமக்களை சங்கடத்திற்குள்ளாக்கி உள்ளது. அன்றாட தேவைக்கு பொருட்கள் வாங்க கடைக்கு சென்றால் குறைந்தது 500 ரூபாய் ஆகிவிடுகிறது. ஆனால், இன்று எந்த கடைக்கு சென்றாலும் 500 ரூபாயை வாங்க மறுக்கிறார்கள்.
காலையிலேயே அருகிலுள்ள ரிலையன்ஸ் கடைக்கு சென்று காய்கறி வாங்கலாம் என்று போனேன். ஆனால்,உள்ளே போகும்போதே, சார் உங்களிடம் சில்லரை இருக்கிறதா… என்று கேட்டுவிட்டுதான் உள்ளேயே அனுமதிக்கிறார்கள்.. என்ன செய்வது என்று தெரியவில்லை… ஏடிஎம் சென்று பணம் எடுக்கவும் முடியவில்லை… எல்லாம் காலத்தின் கோலம் என்று வெறுப்புடன் பேசினார்.
குடும்பபெண் சர்மிளா,
நான் ஹவுஸ் ஒயிப். எனது கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். 7ந்தேதிதான் அவருக்கு சம்பளம். அவரது சம்பள பணம் முழுவதும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக உள்ளது. இன்றுதான் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், பெண்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கலாம் என்று நினைத்தேன். ஆனால், தற்போது எதுவும் வாங்க இயலாத சூழ்நிலையில் இருக்கிறேன்… மோடி ஏன் எங்களை போன்ற நடுத்தரவர்க்க மக்களை கஷ்டப்படுத்துகிறார்….? கருப்பு பணம் ஒழிக்க வேண்டுமென்றால் பண முதலாளிகளை பிடித்து, பணத்தை புடுங்க வேண்டியதுதானே… நம்மைபோன்ற ஏழைபாழைகளை தொல்லைப்படுத்துவது ஏன்? என்று வெறுப்புடன் பேசினார்.
கல்லூரி மாணவி,
நான் ஒரு தனியார் கல்லூரியில் விஸ்காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். மோடியின் இந்த அறிவிப்பை ஒரு வகையில் வரவேற்கலாம். ஆனால் கருப்பு பணத்தை வெளியே கொண்டுவர எத்தனையோ வழிகள் இருக்கும்போது இப்படி திடீரென அறிவித்தது பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் என்றார்.
நான் காலேஜ் பீஸ் கட்டுவதற்காக என அப்பா என்னிடம் 500 ரூபாய்களாகத்தான் தந்துள்ளார். இன்று கட்டலாம் என்று இருந்தேன்.. ஆனால், தற்போது பணம் செல்லாது என்று அறிவித்து உள்ளதால் என்ன செய்வது என்று தெரியவில்லை என்றார்.
மோடியின் அறிவிப்பு காரணமாக, ஏழை மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.