டெல்லி: நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலில் உ.பி. உத்தரகாண்ட் உள்பட 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. பஞ்சாபில் மட்டும் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது.

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று காலை  வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிற்பகல் 2மணி வரையிலான வாக்கு எண்ணிக்கை நிலவரம்

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக 267 இடங்களில் முன்னணியில் உள்ளது. இதன் காரணமாக பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி உளளது. சமாஜ்வாதி கட்சி 124 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுகிறது.  பகுஜன் சமாஜ் கட்சி 5 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 4  இடங்களிலும், மற்ற கட்சிகள் 3 இடங்களையும்  கைப்பற்றி உள்ளன. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கடந்த இரு ஆண்டு முயற்சிக்கு பலன் கிட்டவில்லை. காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலிலும் படுதோல்வி அடைந்துள்ளது.

70 தொகுதிகளைக்கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில்  பாஜக 47 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் அங்கு பாஜக ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது.  காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுகிறது. பிஎஸ்பி 1 இடத்திலும் மற்றவை 3 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

117 தொகுதிகளைக்கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 59 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்த நிலையில், அங்கு ஆம்ஆத்மி கட்சி 90 இடங்களில் முன்னணியில் உள்ளது. இதனால் ஆம்ஆத்மி ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.  காங்கிரஸ் 17 தொகுதிகளில் மட்டுமே முன்னணியில் உள்ளது. முன்னாள் முதல்வர்கள் கேப்டன் அம்ரீந்தர் சிங், காங்கிரஸ் முதல் சன்னி மற்றும் சித்து உள்பட பலர் தோல்வியை சந்தித்துள்ளனர். பாஜக3  இடங்களிலும், சிரோன்மணி அகாலிதளம் 6 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

60 தொகுதிகளைக்கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பாஜக 28 இடங்களில் முன்னணியில் உள்ளது. இதனால் அங்கு பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி 14 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. நாகா மக்கள் முன்னணி 9 இடங்களிலும் மற்றவை 14 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.

40 தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்தில் பெரும்பான்மை பெற 21 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் அங்கு பாஜக 19 இடங்களில் முன்னணியில் உள்ளது. இதனால் ஆட்சி அமைக்க உரிமை கோரப்போவதாக முதல்வர் சாவந்த் கூறி உள்ளார். கோவாவில்  காங்கிரஸ் கட்சி 12 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும், ஆம்ஆத்மி 3 இடத்திலும் மற்றவை 3 இடங்களிலும்  முன்னணியில் இருந்து வருகிறது.