ராமநாதபுரத்தில் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் தற்போது வரை 5 பேர் வேட்புமனு தாக்கல்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக போட்டி வேட்பாளராக ஓ. பன்னீர்செல்வம் களமிறங்கியுள்ளார்.

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் 2022ம் ஆண்டு அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது பாஜக ஆதரவுடன் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

நேற்று தனது ஆதரவாளர்கள் புடைசூழ வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் என்ற நபர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரைக் கொண்ட மேலும் 3 பேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 5 ஓ. பன்னீர்செல்வங்களும் தனி சின்னத்தில் போட்டியிட உள்ளதால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுவதுடன் வேட்புமனு தாக்கல் நிலையிலேயே ஓ.பி.எஸ். கடும் போட்டியை சந்திக்க நேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் மேலும் எத்தனை பன்னீர்செல்வங்கள் மனுதாக்கல் செய்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.