சென்னை,
இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரிட்ஜோ குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவித்து உள்ளது. மேலும் காயம் அடைந்த மீனவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி அறிவித்து உள்ளார்.
நேற்று ராமேஷ்வரம் பகுதி மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் துப்பாக்கியால் சுட்டும், எறிகுண்டு வீசியும் துரத்தியடிக்கப்பட்டனர்.
அப்போது இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி குண்டு பட்டு பிரிட்ஜோ என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், ஒரு மீனவர் படுகாயமடைந்தார்.
மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை அரசின் அத்துமீறிய செயலை கண்டித்தும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரியும், இறந்த பிரிட்ஜோவின் உடலை வாக்க மறுத்து அவரது உறவினர்களும், அந்த பகுதி மீனவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்கள் போராட்டம் நடத்த ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை அரசின் துப்பாக்கி சூட்டில் பலியான இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் முதல்வர் நிவாரண நிதியும், காயம்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கியும் தமிழக முதல்வர் எடப்பாடி அறிவித்து உள்ளார்.
மேலும், மீனவர் சுடப்பட்டதற்கு கடும் கண்டனத்தையும் அவர் தெரிவித்து உள்ளார்.