சென்னை:

முன்னாள் தேனாம்பேட்டை காவல்நிலைய டிஎஸ்பியும், தற்போது ஆவடி பட்டாலியன் பிரிவில் பணிபுரிந்து வருபவருமான  டிஎஸ்பி முத்தழகு வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று காலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் பெண் ஒருவருடன் டிஎஸ்பி முத்தழகு லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியான நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

டிஎஸ்பி முத்தழக்கு ஏற்கனவே தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தார். இவர்மீது ஏராளமான லஞ்ச புகார்கள் எழுந்ததால், கன்னியாகுமரிக்கு தூக்கி அடிக்கப்பட்டார். ஆனால், பின்னர் பார்க்க வேண்டியவர்களை பார்த்து, மீண்டும் சென்னைக்கே மாற்றல் வாங்கி வந்தவருக்கு, ஆவடி பட்டாலியனில் பணி ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில்,  கடந்தாண்டு ஜூன் மாதம் தேனாம்பேட்டையில் உதவி ஆய்வாளராக இருந்த போது, ஆட்கடத்தல் வழக்கு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்,  கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவரும் டிஎஸ்பி முத்தழகும் போனில் பேசிய ஆடியோ சமீபத்தில் வாட்ஸ்அப்பில் வெளியாகி  வைரலாக பரவியது. அந்த ஆடியோவில், டிஎஸ்பி முத்தழகு 5 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டது தெரியவந்தது.

இதையடுத்து,  இன்று காலை சென்னை அண்ணாநகரில் உள்ள முத்தழகு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  சோதனையின் போது முத்தழகு வீட்டில் தான் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. சோதனையின்போது, முத்தழகு வீட்டில் இருந்து ஏராளமான சொத்து பத்திரங்கள், நகைகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.