சென்னை: தள்ளுபடிகளும், சலுகைகளும், ஆஃபர்களும், இலவசங்களும் தமிழ்நாட்டு மக்களிடையே ஒன்றிணைந்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சியும் சொத்து வரி செலுத்துவதற்கு ஆஃபர் அறிவித்து உள்ளது. அதன்படி, அக்டோபர் 15ந்தேதிக்குள் அடுத்த அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தினால் 5 சதவிகித கட்டண சலுகை, அதாவது கேஷ்பேக் கிடைக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சியின் 2021 -22 நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் மொத்தமாகவே ரூ.1,240 கோடி வரி வசூலாகியிருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டுமே ரூ.945 கோடி வரி வசூலாகியுள்ளது. கடந்த முதல் அரையாண்டை விட 208 கோடி ரூபாய் அதிகம். அதே போல் தொழில்வரி ஆனது 248 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, மாநகராட்சியில் அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் 5% சலுகை அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாநகராட்சியின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை https://chennaicorporation.gov.in/gcc/online-payment/property-tax/property-tax-online-payment/ என்ற இணையதளம் வழியாகவும், நம்ம சென்னை செயலி, கியூஆர் கோடு ஸ்கேன் செய்தும், இ சேவை மையங்களிலும், வரி வசூலிப்பவர்களிடம் நேரடியாகவும் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினார் 5% சலுகை அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு.