சென்னை:

திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது 99 சதவிகிதம் உறுதியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என தெரிகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க திமுக தலைமையில் சில கட்சிகள் இணைந்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்கி வருகின்றன. அதுபோல அதிமுக தலைமையில் பாஜக, பாமக இணைந்து மற்றொரு மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

இந்த இரு கட்சிகளும், விஜயகாந்தின் தேமுதிகவை இழுக்க முயற்சிகள் எடுத்து வருகின்றன. தேமுதிகவுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு வாக்குகள் உள்ள நிலையில், தேமுதிகவை அதிமுக அணிக்கு  இழுக்க பாஜக நேரடியாக முயற்சி மேற்கொண்டது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நேரடியாகவே சென்று  விஜயகாந்த் மற்றும் பிரேமலதா, சுதீஷ் ஆகியோரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய நிலையில்,  தேமுதிகவின் நிபந்தனைகள் ஒத்துவராததால், பதில் சொல்ல முடியாமல் திருப்பினார். பின்னர் அதிமுக தலைமை பேசியதாக தகவல் வெளியானது.

தேமுதிகவுடன் கூட்டணி குறித்து தொடக்கத்தில் ஆர்வம் காட்டாத திமுக, கூட்டணியை பலப்படுத்த எண்ணி, தேமுதிகவை தொடர்பு கொள்ள முயற்சித்தது.  இதற்கிடையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திடீரென 2 நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் வீட்டுக்கு விசிட் அடித்து, கேப்டனின் உடல் நிலை குறித்து விசாரித்து, கூட்டணிக்கு அச்சாரம் போட்டார். அதைத் தொடர்ந்து, திமுக தேமுதிக இடையே திரைமறைவு பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் திமுக, தேமுதிக இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்க திமுக கூட்டணி முடிவு செய்து இருப்பதாகவும், இதில் 3 தொகுதிகளை திமுகவும், 2 தொகுதிகளை காங்கிரசும் ஒதுக்க முடிவு செய்து உள்ளதாகவும் பிரபல பத்திரிகை தெரிவித்து உள்ளது.

ஆனால், காங்கிரஸ் தரப்பில் இருந்த 2 தொகுதிகள் ஒதுக்குவது குறித்து இன்னும் உறுதி செய்யப்பட வில்லை என்றும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி, இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைமையை தொடர்பு கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Credit:The News minutue