சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கில் நடைபெறும் தடகள போட்டிகளில் கலந்துகொள்ளும் இந்திய வீரர், வீராங்கனைகள் பெயர்களை இந்திய தடகள சம்மேளம் இன்று அறிவித்து உள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இது தமிழகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர், வீராங்கனைகள் வெற்றிக்கனிகளை பறித்துவர பத்திரிகை டாட் காம் இணையதளம் முன்னதாகவே வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது.
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில், தடகளப் போட்டிகள் ஜூலை 31 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிறைவு பெறுகின்றன. இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 26 வீரர் மற்றும் வீராங்கனை பட்டியலை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்து உள்ளது.
இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகள், இரு வீரர் உள்பட 5 பேர் இடம்பெற்றுள்ளனர். தடகள வீராங்கனைகளான ரேவதி, தனலட்சுமி, சுபா வெங்கடேசன் மற்றும் வீரர் ஆரோக்கிய ராஜீவ், நாகராஜா பாண்டி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றிருந்தார். தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பயிற்சி பெற்று வரும் தனலட்சுமி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இவர் ஜப்பான் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 4×400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் கலந்துகொள்கிறார்.
அதுபோல திருச்சியை சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், சுபா வெங்கடேசனும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த சுபா வெங்கடேசன் என்பவர் 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி ஆணைய விடுதியில் தங்கி பயிற்றிபெற்றவர்.
மற்றொருவர் திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ். இவர் 4×400 தொடர் ஓட்டப்போட்டியில் கலந்துகொள்கிறார்.
இன்னொருவர் நாகநாதன் பாண்டி. இவரும் 4×400 தொடர் ஓட்டப்போட்டியில் கலந்துகொள்கிறார்.
மதுரையைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி 4×400 கலப்பு தொடர் ஓட்டப்பத்தில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
தமிழகத்தில் இருந்து 4 தடகள வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற உள்ளது தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. தேர்வாகி உள்ள வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.