சென்னை:

சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்ட திபெத்தியர்கள் 5 பலவந்தமாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். அதுபோல மாமல்லபுரம் அருகே சந்தேகத்தின் பேரில் 4 சீனர்களையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான 2வது முறைசாரா சந்திப்பு மாம்மல்லபுரத்தில் இன்று முதல் நாளை வரை 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்னம் சில மணி நேரத்தில் சென்னை வர உள்ள சீன அதிபருக்கு எதிராக, அவர் தங்க உள்ள  கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதி பகுதியில் சில திபெத்தியவர்கள் திடீரென நுழைந்து கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

அவர்களை அதிரடியாகவும் பலவந்தமாகவும்  கைது செய்த காவல்துறையினர் வேனில் ஏற்றி கிண்டி காவல்நிலை யத்துக்கு கொண்டு சென்றனர். 3 பெண்கள் உள்பட 5 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் தங்கி படித்து வரும் திபெத்தியர்கள் உள்பட பலரை கடந்த சில நாட்களாக போலீசார் தடுத்து வைத்துள்ள நிலையில், இன்று கோஷமிட்ட 5 திபெத்தியர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அதுபோல, மாமல்லபுரம் அருகே சந்தேகத்தின் பேரில் 4 சீனர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன சோதனையின் போது காரில் வந்த 4 சீனர்களிடம் அடையாள அட்டை ஏதும் இல்லாததால் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.