சென்னை

திமுக ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் 5.49 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.   அப்போது உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி விவாதங்களுக்கு பதில் அளித்து உரையாற்றினார்.

சக்கரபாணி தனது உரையில், “கடந்த ஆட்சியில் அனுமதிக்கப்பட்ட ஈரப்பத அளவை விட அதிக ஈரப்பதத்தில் அரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  அந்த மூன்றரை லட்சம் டன் அரிசியை மக்களுக்கு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளோம்.

புதிய ரேஷன் அட்டைக்கு 10,60,809 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று, அதில் 7,83,292 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் 5,81,196 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.  இதில் 5,49,505 விண்ணப்பதாரர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டு, மீதமானவர்களுக்கு அட்டை அச்சிடும் பணி நடைபெறுகிறது.

தவிர 3000 அட்டைகளுக்கும் அதிகமாக உள்ள பெரிய ரேஷன் கடைகளைப் பிரித்து பகுதிநேரக் கடைகளாக மாற்றுவது குறித்துப் பரிசீலிக்கக் குழு அமைக்கப்படவுள்ளது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் 9 ஆண்டுகளில் 53 ஆயிரம் கோடி ரூபாய் உணவு மானியமாக வழங்கப்பட்டது திமுக ஆட்சிக்கு வந்து 3 மாதங்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உணவு மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.