சென்னை: தமிழ்நாட்டின் 5.1 கோடி ரேசன் கார்டு பயனாளர்களின் தரவுகள் திருடப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, பொது விநியோகத்துறையின் இணையதளமான TNPDS தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டின் பொது விநியோகத்துறையின் இணையம் கடந்த 26ம் தேதி முடக்கப்பட்டு, தமிழக பொது விநியோகத்துறை தரவுகள் இணையத்தில் விற்பனைக்கு என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இணையதளத்தை dark web என்ற  ஹேக்கர்கள் குரூப் முடக்கி பயனர்களின் தரவுகளை திருட்டி விற்பனை செய்வதாக தெரிவித்து உள்ளது.

இந்த கும்பல்  வியட்நாமை சேர்ந்தது  என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இணையத்தை ஹேக் செய்த கும்பல் 1945-VM என்ற முத்திரையை விட்டுச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மும்பையை சேர்ந்த சேவ்தெம் இந்தியா பவுண்டேசன் அமைப்பு சிவில் சிஐடி போலீசில் புகார் அளித்துள்ளது. பயனாளர்களின் ஆதார் அட்டை விவரங்கள், செல்போன் எண்கள், முகவரிகள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளதாகவும் ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்டதாக கூறப்படும் சர்வரில் 2 கோடியே 60 ஆயிரம் ரேசன் கார்டுகளின் தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 5.1 கோடி ரேசன் கார்டு பயனாளர்களின் தரவுகள் திருடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பயனர்களின் ஆதார் அட்டை பயனீட்டாளர்களின் கைரேகைகள் திருடப்பட்டிருக்கலாம் எனவும் அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.