எஸ்வி.ரங்கா ராவ்.. அவருக்கு நிகர் வேறு யார்?
நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
நாட்டில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஏதோ ஒரு விதத்தில் திரைத் துறையில் இணைந்து பணியாற்றிய பெருமை கமலஹாசனுக்கு உண்டு.
அப்படிப்பட்டவர், பெரும் மனக்குறையாக சொன்ன ஒரு விஷயம் எஸ் வி ரங்காராவ் உடன் நடிக்க முடியாமல் போய்விட்டது என்பதே.
சினிமா நட்சத்திரங்களே உயர்ந்து பார்க்கிற அளவுக்கு பல்வேறு விதங்களில் நடிப்பாற்றலில் மிக உயர்ந்த நட்சத்திரம் எஸ் வி ரங்காராவ்.
1950ல் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற மந்திரி குமாரி படத்தில் ஹீரோ எம்ஜிஆர் என்றாலும், நக்கலான நடிப்பால் ஒட்டுமொத்த படத்தையும் தனதாக்கி சுருட்டிக்கொண்டுபோனவர் வில்லனாக நடித்த எஸ்ஏ நடராஜன் அவர்கள்.
தற்போதைய தலைமுறைக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் வின்னர் படத்தில் ஹீரோ பிரசாந்த் என்றாலும் படத்தை மொத்தமாக போட்டி போட்டு ஓட்டிக்கொண்டு போனது காமெடியன் வடிவேலு தானே..
கூடாரத்தில் புகுந்த ஒட்டகம் கூடாரத்தை சுருட்டிய கதையாய் ஹீரோக்களை ஓரங்கட்டி படத்தை தனது படம் என பேசவைத்த திறமை சில ஜாம்பவான்க ளுக்கு மட்டுமே உண்டு.
அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர் குணச்சித்திர நடிகர் எஸ்வி. ரங்காராவ்.
பாதாள பைரவி, மாயாபஜார், படிக்காத மேதை, அன்பு சகோதரர்கள் என அவர், ஹீரோக்களை ஓரங்கட்டி தன்னை பெரிதும் பேசவைத்த படங்களின் பட்டியல் நீளமானவை.
அதற்கு நிகரான விஷயம்,அவர் ஏற்று நடித்த பாத்திரங்களில் ஒன்றுகூட சோடைபோனதே கிடையாது.
25 ஆண்டுகள்.. படங்களில் பல்வேறு பாத்திரங்களில் ரங்காராவ் நடித்தார் என்பதைவிட, வாழ்ந்து விட்டுப்போனார் என்பதே அப்பட்டமான உண்மை..
1960ல் படிக்காத மேதை படத்தில் பணம்போன பிறகு பெற்ற பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு ரசிகர்களை கண்கலங்க வைத்த அந்த பெரியவர் சந்திரசேகர் பாத்திரத்திற்கும்,,,,
1972ல் சிவாஜியின் ராஜா படத்தில் காதலனை பணயக்கைதியாக பிடித்துவைத்துக் கொண்டு காதலி பத்மா கன்னாவின் மிச்ச சொச்ச ஆடைகளையும் அவிழ்க்க போதையில் போராடும் காமவெறி பிடித்த அந்த வில்லன் நாகலிங்கத்திற்கும் இடையேதான் எவ்வளவு வித்தியாசம்..?
ரங்காராவை பொறுத்தவரை துரதிஷ்டவசமாய் அவருக்கு இளமையிலேயே முன் வழுக்கை, வயதுக்கு மீறிய பருத்த சரீரம், சற்று முதுமையான தோற்றம் ஆகியவை அமைந்துவிட்டன.
ஆனால் அதே நேரத்தில் நெடிய உயரமும் வித்தியாசமான குரல் வளமும் அவருக்கு பெரும் பலமாகிவிட்டன.
தெலுங்கில் 1940-களின் மத்தியில் படங்களில் தலைகாட்டுவதும் வெறுத்துப்போய் விலகி வேறு சில தொழில்களில் ஈடுபடுவதும் என இருந்த ரங்காராவுக்கு தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் நல்ல அடித்தளம் இட்ட படம், நாகிரெட்டி-சக்ரபாணி தயாரித்த பாதாள பைரவி (1951).
வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படங்களில் முக்கியமானவை இந்த பாதாள பைரவி. இன்றைய குழந்தைகள் கூட பார்க்க நேரிட்டால் மந்திர தந்திரக் காட்சிகளை அவ்வளவு அழகாய் ரசிப்பார்கள்.
நடிகையர் திலகம் சாவித்திரி இந்த படத்தில்தான் திரையுலகில் அறிமுகமானார். ஒரேயொரு பாடலுக்கு வந்து நடனமாடி விட்டுப்போவார்.
பாதாள பைரவியில் ஹீரோ என்டி ராமாராவை வில்லன் ரங்காராவ் அநியாயத்திற்கு காலி செய்து படத்தையே தனதாக்கி விட்டார்.
காரணம், பாதாள பைரவி என்றாலே பலே பிம்பகா என்று அடிக்கடி ஸ்டைலாக சொல்லியபடி வரும் ரங்காராவின் அந்த நேபாள மந்திரவாதி ரோல்தான் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வரும்.
இத்தனைக்கும் ஹீரோ ராமராவ் ஹீரோயின் மாலதியும் அமைதியில்லாதென் மனமே என்று பாடும் அற்புதமான டூயட் கள் உட்பட பல பாடல்கள் உண்டு.
இருந்தாலும் படத்தில் நேபாளம் மந்திரவாதியாக ரங்காராவ் எப்போது வருவார் என்றே ரசிகர்களை படம் ஏங்க வைக்கும்.
டயலாக் டெலிவரி, எந்த ரோலாக இருந்தாலும் அசால்டாக தூக்கி சாப்பிடுகிற திறமை ரங்காராவிடம் இருப்பதை தெலுங்கு திரையுலகம் புரிந்துகொண்டபிறகுதான் , அவரை வளைத்துப்போட ஆரம்பித்தது.
1950களில் பல படங்கள் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் என இருமொழிகளில் தயாரிக்கப்படுவது வழக்கம்.
காலையில் நாகேஷ்வர ராவ் தெலுங்கில் நடித்தார் என்றால், மதியம் அதே செட்டில் ஜெமினி கணேசன் தமிழில் பேசி நடித்துக்கொண்டிருப்பார்.
ஆனால் சில பேர் மட்டும் இரு மொழிகளிலும் இருப்பார்கள். 1957ல் வெளியான மாபெரும் காவியமான மாயா பஜாரில் கடோத்கஜனாக நடித்த ரங்காராவ் இரு மொழிகளிலும் தவிர்க்க முடியாதவராகி விட்டார்.
கடோத்கஜனாக ஒட்டுமொத்த கல்யாண வீட்டு சாப்பாட்டை ஒத்தை ஆளாக சாப்பிடும் அந்த, ‘’ கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்’’ என்ற பாடல் எத்தனை யுகமானாலும் ரங்காரவின் புகழை பாடிக்கொண்டே இருக்கும்.
இருமொழி மாயா பஜாரில் என்டிஆர், நாகேஸ்வராவ், சாவித்திரி, ஜெமினிகணேசன் முக்கமாலா நம்பியார், தங்கவேலு ரேலங்கி என ஒரு பெரிய ஜாம்பவான் பட்டாளமே நடித்திருந்தாலும் இன்றைக்கும் அது கடோத்கஜன் ரங்காராவ் படமே..
ஆஜானுபாகு தோற்றத்தில் வசனங்களை அவ்வளவு வேகமாக ஆனால் மிகவும் வித்தியாசமான ஸ்டை லில் கலக்கியிருப்பார். இந்திய அளவில் அவர் அளவுக்கு புராண பாத்திரங்களில் நடித்த இன்னொரு நட்சத்திரம் இருக்கிறாரா என்றால் இல்லை என்றே சொல்லலாம்
கூர்த்து கவனித்தால் இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தன் ஆரம்ப கால படங்களில் எஸ்.வி.ரங்கா ராவ் மாடூலேஷனில்தான் பேசியிருப்பது தெரியவரும்
புராண, இதிகாச படங்களில் இப்படி வசனங்களை தெறிக்கவிட்ட ரங்காராவ், சமூக படங்களில், அதுவும் குணச்சித்திர வேடம் என்றால் அப்படியே நேர்மாறாய் கணிவுடன் பேசி அசத்துவார்.
1952ல் பெல்லி சேசி சூடு.. படம்.. என்டி ராமாராவை ஹீரோவாக வைத்து தெலுங்கு தமிழ் என இரு மொழி தயாரிப்பு. துண்டு வேடங்களில் நடித்து வந்த சாவித்திரி இந்த படத்தில்தான் முதன் முதலில் கதாநாயகியாக பிரமோட் ஆனார். தமிழில் கல்யாணம் பண்ணிப்பார் என வெளியானது.
இதில் மல்லுவேட்டி ஜிப்பா என ஜமீன்தாராய் பெரிய மனிதர் தோற்றத்தில் ரங்காராவ் வருவார். மிகவும் கேஷுவலான நடிப்பு அது…
அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், வயதான தோற்றத்தில் வந்த ரங்காராவுக்கு அப்போது வயது வெறும் 33 என்பதே..
இந்த இடத்தில் நடிகர் வி கே ராமசாமியை குறிப்பிட்டே ஆகவேண்டும் அவரு இன்னும் மோசம். இருபது வயதிலேயே வயதான தோற்றத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
எந்த நேரத்தில் பெல்லி சேசி சூடு படத்தில் வயதான மனிதர் பாத்திரத்தில் நடிக்க ரங்காராவ் ஒப்புக்கொண்டாரோ தெரியவில்லை, பெரும்பாலான படங்களில் ரங்காராவ் என்றாலே இப்படித்தான் என ஜமின்தார், கௌரமான குடும்பத்தலைவர், செல்வந்தர் என மல்லுவேட்டி ஜிப்பாவை நிரந்தரமாய் அவருக்கு கட்டிவிட்டார்கள்.
தன்னைவிட பெரிய, தன் வயதொத்த டாப் ஸ்டார் களுக்கெல்லாம் தந்தையாகவும் மாமனாராகவுமே பெரும்பாலும் ரங்காராவ் நடித்தார்.
ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கொடுக்கப்பட்ட வயதான ரோல்களில் வித்தியாசம் காட்டி பின்னிபெடலெடுத்தவர் அவர்..
மகனின் காதலுக்கு குறுக்கே நின்ற அந்த தேவதாஸ் (1953)படத்தின் ஜமீந்தார் நாராயணராவ், மிஸ்ஸியம் மாவின் ஜமீந்தார் கோபால், இரும்புத்திரை மில் முதலாளி என ஒவ்வொரு படத்திலும் தனி அடையாளம் தெரியும்..
அன்னை படத்தில் பிரிந்துபோய்விட்ட வளர்ப்பு மகனை நினைத்து பானுமதி அழுவார்..
புலம்புவது.. சாந்தமாவது.. புலம்புவது.. சாந்தமாவது.. என தாய்மையின் வெளிப்பாட்டை வித்தியாசமாக காட்டி சீனையே பிரித்துமேய்வார்.
அந்த பானுமதியை, தேர்ந்தெடுத்த வார்த்தைகளை வைத்து நிதானமாக தேற்றுகிற ரங்காராவின் நடிப்பு, திரையுலக காட்சிகளில் ஒரு பொக்கிஷம் என்றே சொல்லலாம்.
குடும்பத்தில் தலைவன் மட்டும் நிதானத்தை காட்டினால், எவ்வளவு பெரிய பிரச்சினைகளையும் சுமூகமாக தீர்வுகாண முடியும் என்பதை பல படங்களில் தன் நடிப்பாற்றலால் போதித்த ஒரு விவேகத்தின் பல்கலைக்கழகம் ரங்காராவ்.
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்எஸ்ஆர், முத்து ராமன் வெற்றிகரமாக வலம்வந்த பல முன்னணி ஹீரோக்களுக்கு மட்டுமல்ல, சாவித்திரி, சரோஜாதேவி, கே.ஆர்விஜயா, தேவிகா போன்ற திறவை மிக்க நடிகைகளுக்கும் பல படங்களில் ரங்காராவின் நடிப்பு பெரும் பக்கபலமாக அமைந்திருந்தது..
சிவாஜியின் இருவர் உள்ளம் (1962) படத்தில் பணக்கார தந்தையாக இருந்து, பெண் பித்தனான மகனை சலிப்போடு எதிர்கொள்ளும் விதமும் அவனே திருந்திவிட்டபிறகு பாசத்தில் உருகும் விதமும் என ஒரே படத்தில் இருவேறு ரங்கராவ்களை பார்த்தால் ஆச்சர்யமே மிஞ்சும்…
சர்வர் சுந்தரம் படத்தில் நடிகைகளுக்கு பீல்ட்டில் ஒத்து ஊதும் தமிழ்பட இயங்குநர்களின் ‘வழிதலை’ அப்பட்டமாக வெளிப்படுத்திய ரங்காராவின் பாங்கு செம கிளாசிக்…
அண்ணன் தங்கை பாசத்திற்கு பாசமலர் என்றால், அதற்கு இணையானது அண்ணன்-தம்பி பாசத்திற்கு திகழ்ந்த ரங்கராவின் கண்கண்ட தெய்வம் படம்.
சாரதா, கற்பகம், நானும் ஒரு பெண், சர்வசுந்தரம், எங்கவீட்டுப்பிள்ளை, ராமு, பேசும் தெய்வம் வாழையடி வாழை என ரங்காராவின் அலட்டலே இல்லாத நடிப்பால் அலங்கரிக்கட்ட படங்கள் ஏராளம்..
குணசித்திரத்தால் கட்டிப்போட்ட எஸ்வி ரங்காராவ், 1969ல் எம்ஜிஆரின் நம்நாடு படத்தில் மோசமான அரசியல்வாதி ஆளவந்தாராக நடித்தபோது பலருக்கும் அடப்பாவி மனுஷா உனக்குள் இப்படியும் ஒரு வில் லத்தன நடிப்பாற்றல் உண்டா என்று வியப்பு வரும்.
ஆனால் அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் மக்களின் அறியாமையை வைத்து காசாக்குவார்கள், அரசியலில் வெற்றிபெற என்னென்ன தகிடுதத்தங்களை செய் வார்கள் என்பதையெல்லாம் அவர் நடிப்பில் வெளிப்ப டுத்தை காணும்போது மிரட்சி ஏற்படாமல் போகாது.
”ஆண்டவனே மனிதனா பிறந்து தேர்தல்லு நின்னு ஜெயிச்சா லும் அவனும் லஞ்சம் வாங்காம இருக்கமுடியாது.”
“ஏழைங்ககிட்ட இருந்து காப்பாத்துறேன்னு பணக்கா ரங்ககிட்டேயிருந்து காசு வாங்கனும், பணக்கா ரன்கிட்டயிருந்து காப்பாத் துறேன்னு ஏழைங்க கிட்ட வோட்டை வாங்கனும். அப்புறம் ரெண்டுபேரையும் சுத்தமா மறந்துடணும்.”
“”ஒரு கெட்ட காரியத்தை செஞ்சிமுடிச்சி கொள்ளை யடிக்க னும்னா எப்பவும் ஒரு நல்லவனை முன்னால நிறுத்தனும்.” இப்படி நம்நாடு படத்தில் எஸ்வி ரங்காராவ் அடிச்சிவிடும் வசனங்கள் எவர்கிரீன் மாஸ்..
சர்வதேச, தேசிய விருது என பல தரப்பட்ட விருது களை குவித்த எஸ்வி ரங்காராவ் தமிழில் கடைசியாக 1974ல் நடித்த அன்புச்சகோதரர்கள் படத்தில் ‘’முத்துக்கு முத்தாக சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக’’ என பாடி குணசித்திர நடிப்பால் கண்கலங்க வைத்துவிட்டுத் தான் போனார்.
ரங்காராவ்க்கு ஷேக்ஸ்பியராக நடிக்கவேண்டும் என்ற ஆசை.. கடைசிவரை நிறைவேறாமலேயே போய்விட்டது.
இளவயதில் முதியவர் வேடங்களை ஏற்கத்தொடங்கிய ரங்காராவ், இறக்கும் போது வயது 56தான்..
எஸ் வி ரங்காராவை படங்களில் அணுஅணுவாய் ரசித்த, இன்றைக்கும் ரசித்துக்கொண்டிருக்க நமக்கு,
அந்த ஜாம்பவானின் பிறந்த நாளான இன்று #HBD_103 நிறைய நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது..
உலகப் பிரச்சனைகளை பார்த்துக்கொள்ள ஏராளமானோர் உள்ளதால் நாம் நம் பொழுதை ஜாலியாக கழிப்போம்