சென்னை:  சென்னை  கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது வழித்தட பணிகள்  இந்த மாத இறுதி வாரத்தில் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதை  சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உறுதி செய்துள்ளார்.

சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே தற்போது 3 பாதைகள்  உபயோகத்தில் உள்ளன. இதில், இரண்டு பாதைகளில் புறநகர் மின்சார ரயில்களும், ஒருபாதையில் விரைவு மற்றும் சரக்குரயில்களும் இயக்கப்படுகின்றன.

தாம்பரம் முனையத்திலிருந்து புறப்படும் ரயில்களை இயக்குவதற்கு சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4-வது பாதை முக்கியமானதாக இருக்கிறது. மேலும், நீண்டதூர மற்றும் சரக்கு ரயில்களை அதிகரிக்கவும் இந்த பாதை அவசியமாகிறது. அதனால், சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே ரூ.279.8 கோடியில் 4-வது புதிய பாதையின் திட்ட அறிக்கைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், நடப்பு பட்ஜெட்டிலும் ரூ.96.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டுமென ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால், இந்த திட்டப்பணியை விரைவில் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த மாதம் இறுதியில் முதல்கட்டமாக கடற்கரை எழும்பூர் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, சென்னை கடற்கரை – எழும்பூர் இடையிலான 4-வது வழித்தட பணிகள்  இந்த மாதம் (ஆகஸ்டு) இறுதி வாரத்தில் தொடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளின் போது செயல்படுத்தப்படும் போக்குவரத்து மாற்றம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதுபோல, ஆந்திர மாநிலம் குண்டூர் – பி.பி.நகர் இடையே 239 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரட்டை வழித்தடம் அமைக்கும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை ரயில்வே வாரியத்திடம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் விஸ்வநாத் ஈர்யா கூறியுள்ளார். பெரம்பூர் ரயில் நிலையத்தில் வடமாநில பயணியை பயணச்சீட்டு பரிசோதகர் தாக்கியது தவறு. வருத்தம் தெரிவித்து கொள்ளவதாகவும் குறிப்பிட்டார்.