சென்னை: சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் பெரியார்” அவர் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம் என திமுக தலைவர்  மு.க. ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

தந்தை பெரியாரின்  47வது நினைவுதினம் இன்று தமிழகம் முழுவதும் திக, திமுக, அதிமுக உள்பட திராவிட கட்சிகளால்  அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி,  சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின்  திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்   மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் திமுக செய்தி தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ் இளங்கோவன் , துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, தென்சென்னை மாவட்டச் செயலாளர் மா. சுப்பிரமணியம் , சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் சுதர்சனம், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ப.ரங்கநாதன், தாயகம் கவி , கே.எஸ் ரவிச்சந்திரன், சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளும் தந்தை பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்,  “சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியாரின் 47வது நினைவு நாள்! சமூக அடிமைத்தனம் – ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை – பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவு கூரப்படுவார்! #Periyar ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம்!” என்று பதிவிட்டுள்ளார்.