டெக்சாஸ்: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் சட்டவிரோதமாக குடியேற வந்தவர்கள்,  அதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 46 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடலை மீட்ட போலீசார், மேலும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்துக்கு சட்டவிரோதமாக குடிபெயர்வோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், அமெரிக்கா ஏற்படுத்தி உள்ள பல்வேறு தடுப்புகள் மற்றும் கெடுபிடிகளால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும் உள்ளனர். இந்த நிலையில், கண்டெய்னர் டிரக் ஒன்றில் அளவுக்கு மீறி நூற்றுக்கணக்கானோர் ஒரு கண்டெய்னரில் ஏறி டெக்சாஸ் வர முயற்சித்த நிலையில், அவர்களில் 46 பேர் நெரிசலில் சிக்சி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

டெக்சாஸ் மாநிலத்தில் சான் ஆன்டோனியோ பகுதியில் ரயில் பாதைக்கு அருகே கண்டெய்னர் லாரி ஒன்றில் சடலங்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் லாரியில் இருந்த கண்டெய்னரை  சோதனை செய்தனர். அதில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது. 16 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் குடிபெயர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் மெக்சிகோ நாட்டில் இருந்து அகதிகளாக அமெரிக்காவில் குடியேற முயன்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இது குறித்து மெக்சிகோ வெளியுறவு அமைச்சர் மார்செலோ எப்ரார்ட் கூறுகையில், “அமெரிக்காவின் டெக்சாஸில் ட்ரக்கில் சென்ற அகதிகள் மூச்சுத்திணறி உயிரிழந்ததை அறிந்தேன். மிகுந்த மனவேதனை அடைகிறேன். ஆனாலும் அவர்கள் மெக்சிகோவை சேர்ந்தவர்களா என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றார். இந்த சம்பவம் குறித்து சான் ஆண்டோனியோ போலீஸார் விசாரித்து வருகின்றனர்.