சென்னை: தமிழகத்தில் உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தயாரிக்க 45 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து உள்ளதாக தமிழகஅரசு கூறியுள்ளது.

தமிழகத்தல் தொற்று பரவல் தீவிரமடைந்து வந்த நிலையில், தடுப்பு மருந்துகளுக்கும், ஆக்சிஜனுக்கும் மத்தியஅரசையும், மற்ற மாநிலங்களையும் நாடும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் தடுப்பு மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள், ஆக்சிஜன் தயாரிப்பு பணியை தொடங்கு நிறுவனங்களுக்கு 30 சதவிகித முதலீடு தமிழக அரசு வழங்கும் என முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்திருந்தார். மேலும்,  மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் மற்றும் கொரோனா தொடர்பான மருந்துகள் உற்பத்தியை நம் மாநிலத்திலேயே உருவாக்குவதற்கும், தொழில் கூட்டு முயற்சிகளை உருவாக்குவதற்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, தமிழக தொழில் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும், உதவிகளையும் அளிக்கும் என்றும் குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் இவ்வாலைகளை நிறுவுவதற்கு விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து விருப்ப கருத்துக்களை கேட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது வரை 45 இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து உள்ளதாக தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு ஆக்சிஜன், தடுப்பூசி, மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்தி உட்கட்டமைப்புகளை விரைவில் நிறுவிட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.