புவனேஸ்வர்

மாநிலங்கள் ஒருங்கிணைந்து கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக்  அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை தாக்குதலால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் பாதிப்பு அடைந்துள்ளன.   விரைவில் மூன்றாம் அலை தாக்குதல் நடக்கலாம் என அச்சுறுத்தல் எழுந்துள்ளது.   எனவே கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 18-44 வயதுடையோருக்கு மாநிலங்களே கொள்முதல் செய்யலாம் என மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இதையொட்டி பல மாநிலங்கள் சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்புக்கள் விடுத்துள்ளன.   இந்நிலையில் ஒரிசா மாநில முதல்வர் நவீன்பட்நாயக் மற்ற மாநில முதல்வர்களுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் ”தற்போதுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடுவது மிகவும் அவசியமான பணி ஆகும்.

இதில் ஒரு மாநிலத்துடன் மற்றொரு மாநிலம் போட்டியிடக் கூடாது.  மாறாக அனைவரும் இணைந்து ஒருங்கிணைந்த கொள்முதல் செய்வது தேவையாகி உள்ளது/  எனவே மாநிலங்கள் உள்ளூர் தேவைக்கு ஏற்ப தடுப்பூசி போடும் திட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சுதந்திரத்துக்கு பிறகு நாடு தற்போது மிகப் பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது.  எனவே நாம் இந்தநிலையில் நமது மன வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு கூட்டுறவாகச் செயல்பட வேண்டும்.   இதன் மூலம் நாம் நமது மக்களின் விலை மதிப்பில்லாத உயிரைக் காக்க முடியும்

மக்களை காக்க நாம் ஒரு குழுவாகச் செயல்படவேண்டும்.   நான் ஒருங்கிணைந்த கொரோனா தடுப்பூசி கொள்முதல் குறித்து அனைத்து முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளேன்.  சிலருடன் இது குறித்து பேசி உள்ளேன்.  நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே நாடு பாதுகாப்புடன் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.