சென்னை,
சென்னை தீவுத்திடலில் 44வது அகில இந்திய சுற்றுலா பொருட்காட்சி இன்று தொடங்கப்படுகிறது. தைப்பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, பொதுமக்கள் விடுமுறையை குதூகலமாக கழிக்க ஆண்டுதோறும் சென்னை தீவுத்திடலில் தமிழக அரசு சார்பில் சுற்றுலா தொழில் பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு சுற்றுலா பொருட்காட்சியை ஏற்பாடு செய்ய தமிழக அரசு, சன்லைட் வேர்ல்டு ஈவன்ட் மேனேஜ்மெண்ட் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி அந்த தனியார் நிறுவனமே பொருட்காட்சி ஏற்பாடுகளை நடத்தி வருகிறது.
இதன் காரணமாக பொருட்காட்சி பார்க்க வருபவர்களுக்கு நுழைவு கட்டணம் வழக்கத்துக்கு மாறாக அதிக அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 70 நாட்கள் நடைபெற உள்ள இந்த பொருட்காட்சி கட்டணமாக பெரியவர்களுக்கு 35 ரூபாயும் குழந்தைகளுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வார நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், கண்காட்சி நடைபெறும்.
இந்தபொருட்காட்சியில் எப்போதும்போல தமிழக அரசு மற்றும் இந்திய அரசு துறைகளின் சாதனை விளக்க அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும் இந்த ஆண்டு, பாகுபலி அரங்கம், தாஜ்மஹால் அரங்கம் போன்றவை கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு வகையான ராட்டினங்கள், பொழுது போக்கு விளையாட்டுக்கள், மேஜிக் நிகழ்ச்சி, உணவகம் போன்ற பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சிக்கு வரும் மக்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக அரசு பொருட்காட்சியில் குழந்தைகளுக்கு மிக்குறைந்த கட்டணமும், அதிக பட்சமாக 10 ரூபாய்க்குள்ளே இருப்பது வழக்கம். அதுபோல அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பார்வையிடவும் அனுமதி வழங்கப்படும்.
ஆனால், இந்த ஆண்டு பொருட்காட்சியை நடத்த தனியாரிடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளதால், நுழைவு கட்டணம் 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.