செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றிபெற்ற 2 இந்திய செஸ் அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு..! முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…

Must read

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி முடிவடைந்த நிலையில், போட்டியில் வெற்றிபெற்ற 2 இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவுபெற்றது. விழா மேடையில் முன்னாள் முதலமைச்சர்கள் ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றது கவனத்தை ஈர்த்தது.

நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் அர்காடி துவார்கோவிச், துணைத்தலைவர் விஸ்வநாதன் ஆனந்த், செஸ் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா நடைபெற்றது. சிறந்த அணிகள், சிறந்த சீருடை அணிந்ததற்கு எனப் பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்பட்டன. இந்திய அணிகள் ஓபன் பிரிவு, பெண்கள் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றது. வெற்றி பெற்ற இந்திய பி அணிக்கும், பெண்கள் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய ஏ அணிக்கும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் விளையாட்டு தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது. போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாடில் பொதுப் பிரிவில் ‘இந்திய பி அணியும்’ பெண்கள் பிரிவில் ‘இந்திய ஏ அணியும்’ என இரண்டு அணிகள் பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

44-வது பன்னாட்டு சதுரங்க விளையாட்டு போட்டிகளில் பொதுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ‘இந்திய பி அணிக்கும்’, பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ‘இந்திய ஏ அணி (பெண்கள்)’ ஆகிய இரண்டு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

More articles

Latest article