சென்னை

சென்னை நகரின் பரபரப்பான பகுதிகளில் 4258 வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளன.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிடி திட்டத்தின்படி அனைத்து பெரு நகரங்களுக்கும் அத்தியாவசியமான வசதிகள் அமைக்கப்பட வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டன. குறிப்பாக நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாகன நெரிசலை தவிர்க்க வேண்டும் என்பதும் இதில் ஒன்றாகும். பெரும்பாலும் இத்தகைய பகுதிகளில் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

இந்த பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்கள் இல்லாததால் வாகனங்கள் சாலை ஓரத்தில் நிறுத்தப்படுகின்றன. அதை ஒட்டி இந்த ஸ்மார்ட் சிடி திட்டத்தின் கீழ் அனைத்து பெரு நகரங்களிலும் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இது போல சென்னையில் 4258 நிறுத்துமிடம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருந்தது.

மத்திய அரசு இதற்கான பணிகளை தொடங்க டெண்டர் மூலம் உத்தரவுகளை பிறப்பிக்க கடந்த மாதம் 31 ஆம் தேதி கடைசி தேதி என கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆயினும் சென்னை மாநகராட்சி இந்த உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை. அதனால் நேற்று முன் தினம் இந்த ஸ்மார்ட் சிடி திட்டக் குழுவின் அதிகாரிகள் டில்லியில் ஒரு சந்திப்பை நிகழ்த்தினர்.

இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்படாத வசதிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். அப்போது இந்த கடைசி தேதி பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதை ஒட்டி சென்னை சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர், “சென்னையில் ஸ்மார்ட் வாகன நிறுத்துமிடப் பணிகள் பிப்ரவரி முதல் வாரம் முதல் தொடங்குகிறது. சென்னையில் அண்ணா நகர், தி நகர் மற்றும் புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்படுகிறது. இதில் அண்ணா நகரில் 1673, புரசைவாக்கத்தில் 385 மற்றும் தி நகரில் 2200 அமைக்கப் பட உள்ளன” என தெரிவித்துள்ளார்.