சென்னை:  தமிழ்நாட்டின் புதிய தலைமைச்செயலாளராக சிவ்தாஸ் மீனா பதவி ஏற்றது முதல் அதிரடி இடமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 5 முறை ஐஏஏஸ் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், தற்போது மாநிலம் முழுவதும 42 டிஆர்ஓக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் DRO (District Revenue officer – மாவட்ட வருவாய் அலுவலர்)  பதவி 1983 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வருவாய் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பான பணிகளை மேற்கொள்ள துணை ஆணையருக்கு உதவி செய்யும் முதன்மை அதிகாரி டிஆர்ஓ என அழைக்கப்படுகின்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் முக்கியமாக மாவட்ட அளவில் பொது நிர்வாகத்தினையும், அன்றாட நிர்வாக பணிகளையும் மேற்பார்வையிடுகிறார். மேலும் வருவாய்த்துறையில் கோட்ட அளவில் வருவாய் கோட்டாட்சியர்களும், துணை ஆட்சியர்களும், வட்ட அளவில் வருவாய்  வட்டாட்சியர்களும் மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

இதுதொடர்பாக  தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவின்படி,  சென்னை மாற்றுத் திறனாளிகள் நல இணை இயக்குநர் ஜெயஷீலா, திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலராக வும், மருத்துவப்பணிகள் கழக முன்னாள் பொது மேலாளர் அனுசுயாதேவி, சென்னை மாவட்ட வருவாய் அலுவலராகவும், மருத்துவப்பணிகள் கழக பொது மேலாளர் தெ.தியாகராஜன் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும், தமிழ்நாடு சுகாதார அமைப்புதிட்ட அதிகாரி வ.மோகனசந்திரன் சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராகவும், அண்ணாபணியாளர் நிர்வாக கல்லூரி கூடுதல் இயக்குநர் ரெ.சுமன், நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்ட அலுவலராக இருந்த கு.குலாம் ஜிலானி பாபா, சென்னை மாநகராட்சி நிலம், உடைமை மாவட்ட வருவாய் அலுவலராகவும், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் சு. அசோகன் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலராகவும், தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா நில நிர்வாக ஆணையரக இணை ஆணையராகவும், நாகப்பட்டினம் மாவட்ட வருவாய் அலுவலர் வி.சகிலா, சென்னை தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்ட மாவட்ட வருவாய் அலுவலராகவும், திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், சென்னை தேசிய நெடுஞ்சாலை நில எடுப்புதனி மாவட்ட வருவாய் அலுவலராகவும், பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கயற்கண்ணி சென்னை மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக இணை இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திறன் மேம்பாட்டுக்கழக மாவட்ட வருவாய் அலுவலர் செ.சாந்தி, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும சந்தை மேலாண்மைக்குழு தலைமை நிர்வாக அலுவலராகவும், வக்ஃப் வாரிய தலைமை செயல் அலுவலர் ஜெய்னுலாப்தீன் செய்தித்துறை சமூக வலைதள இணை இயக்குநராகவும், சென்னை அண்ணா பணியாளர் நிர்வாக கல்லூரி மாவட்ட வருவாய் அலுவலர் சு.கீதா, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக பொது மேலாளராகவும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக பொது மேலாளர் லி.பாரதி தேவி, சென்னை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக்கழக பொதுமேலாளராகவும், அப்பதவியில் இருந்த ரா.ஜீவா கோயம்புத்தூர் நில எடுப்புதனி மாவட்ட வருவாய் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழக பதிவாளர் ஆ.ரவிசந்திரன், திருச்சி தமிழ்நாடு மாநில வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளராகவும், சென்னை முத்திரைத்தாள் மாவட்ட வருவாய் அலுவலர் வே.சாரதா ருக்மணி, டாம்ப்கால் பொது மேலாளராகவும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் க.அன்பழகன், திருவாரூர் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் என தமிழகத்தில் 42 மாவட்ட வருவாய் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.