சென்னை:  கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும், 4136ஆசிரியர் (TRB) பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், அறிவிப்பு போலியானது என  ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்ருதுள்ளது.

2023 – 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு கல்லூரிக் கல்வியியல் சேவையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து நேரடி ஆட்சேர்ப்புக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என 48 பக்க அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அதில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,136 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் மே 15-ம் தேதி மாலை 05.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதை போலவே பொய்யான அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

இந்த நிலையில் இந்த அறிவிப்பு தவறான தகவல் எனவும், இதுபோன்ற போலியான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்து வெளியான தகவல் தவறானது என கூறி உள்ளனர்.