சென்னை: பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்களில் கூடுதலாக நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட திட்டமிப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம், சென்னையில் உள்ள 22 மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்து உள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வரும் மெட்ரோ ரயில் நிர்வாகம், மேலும் பல பகுதிகளுக்கு மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கும் வகையில் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, அனைத்து தரப்பினரும் மெட்ரோ ரயில் சேவையை நாடி வருகின்றனர். தற்போதைய நிலையம், நாள் ஒன்றுக்கு தோராயமாக 3 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர். மெட்ரோ பயணிகளுக்காக பல வசதிகளை ஏற்படுத்தி வரும் மெட்ரோ நிர்வாகம், மற்ற பொது போக்குவரத்துடன் இணைக்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்து மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இநத் நிலையில், பயணிகளின் கோரிக்கை மற்றும் வசதிகளை கருத்தில்கொண்டு, அதிகஅளவில் பயணிகள் உபயோகப்படுத்தும் மெட்ரோ 22 மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.
அதன்படி, அண்ணா நகர், சின்னமலை, வண்ணாரப்பேட்டை, அரசு எஸ்டேட், ஈக்காட்டு தாங்கல், தேனாம்பேட்டை, உயர்நீதி மன்றம் , ஆயிரம் விளக்கு, மண்ணடி, பரங்கி மலை, தண்டையார்பேட்டை நிலையங்களில் தலா ஒரு நகரும் படிக்கட்டும்,
நேரு பூங்கா, எழும்பூர், நங்கநல்லூர் சாலை, கிண்டி, ஏ.ஜி.-டி.எம்.எஸ்., தியாகராயா கல்லூரி மற்றும் நந்தனம் ரெயில் நிலையங்களில் கூடுதலாக 2 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படும்.
அண்ணாநகர் பூங்கா, நிலையத்தில் 3 நகரும் படிக்கட்டுகளும், வடபழனி மற்றும் மீனம்பாக்கத்தில் 4 நகரும் படிக்கட்டுகளும் திருமங்கலத்தில் 5 எஸ்க லேட்டர்களும் அமைக்கப்பட உள்ளன.
இவை அனைத்தும், கான்கோர்ஸ் மற்றும் தெரு நிலைகளை இணைக்கும் வகையில் மேல் நோக்கி மற்றும் கீழ்நோக்கி நகரும் படிக்கட்டுகளாக அமைக்கப்பட இருப்பதாகவும், ஆனால், மெட்ரோ முதல்கட்ட வடிவமைப்பின்போது, திட்டச் செலவை மிச்சப்படுத்தும் நோக்கில் இந்த வசதிகளை செய்யப்படவில்லை என்று கூறிய அதிகாரிகள்,, புதிதாக அமைக்கப்பட உள்ள நகரும் படிக்கட்டுகள் அனைத்து வசதிகளுடன் இருக்கும் என்றும், இதற்கான பணிகள் இந்த மாதத்தில் தொடங்கி ஒரு வருடத்தில் நிறைவடையும் என்றுதெரிவித்து உள்ளனர்.