துபாய் :
துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றான புர்ஜ் கலீபா கட்டிடத்தை கட்டிய கட்டுமான நிறுவனம் அரப்டெக், வேலை இல்லாத காரணத்தால் மூடப்படுவதாக அறிவித்துள்ளது.
பல்வேறு நாடுகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்த இந்த நிறுவனம், புதிதாக கட்டுமானப் பணிகள் எதுவும் இல்லாத நிலையில், நிறுவனத்தின் கடன் சுமை ஏறிக்கொண்டு வருவதை காரணமாக் கூறி இந்த முடிவிற்கு வந்திருப்பதாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளது.
இதனால், 40,000 க்கும் அதிகமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் விநியோகம் செய்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அரப்டெக் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் கடன்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அரபு நாடுகளை சேர்ந்த அரசுகள் தங்கள் செலவினங்களை குறைத்துவருவதும் கட்டுமான பணிகள் குறைந்து வர காரணமாக உள்ளதால் நிறுவனத்தை மூட முடிவெடுத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விதிமுறைகளின் படி நிறுவனத்தை மூடுவதற்கு விண்ணப்பித்துள்ள இந்நிறுவனம் தங்களது கோரிக்கை இன்னும் இரண்டு மாதங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
துபாய் சர்வதேச விமானநிலைய விரிவாக்க பணி, அல் மஃதூம் சர்வதேச விமான நிலையம், லூவ்ரெ மியூசியம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்டுமான பணிகளை இந்நிறுவனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.