வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில், தற்போதைய குடியரசு கட்சியின் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை விட, 10 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னணியில் இருக்கிறார் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன்.
அதேசமயம், பெரும்பாலான அமெரிக்கர்கள், டொனால்ட் டிரம்ப், கொரோனா தொற்றிலிருந்து தப்பித்திருக்க முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அவர், கொரோனா வைரஸ் குறித்து கவனமுடன் இருந்திருக்க வேண்டுமென்பது அவர்களின் கருத்து.
அக்டோபர் 2-3 தேசியளவிலான கருத்துக் கணிப்பில், அதிபர் டிரம்ப்பை விட, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு ஆதரவு அதிகம் வெளிப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியிருக்கும் நிலையில், தற்போது முதன்முறையாக கருத்துக் கணிப்பில் பெரிய முன்னேற்றத்தைப் பெற்றுள்ளார் ஜோ பைடன்.
தேசிய கருத்துக் கணிப்பில், பைடனுக்கு ஆதரவாக 51% பேரும், டிரம்ப்புக்கு ஆதரவாக 41% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 4% பேர் மூன்றாவது வேட்பாளருக்கும், மீதி 4% பேர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.