மும்பை: பெல் தொழிற்சாலை பிளான்ட் அமைப்பதற்காக மராட்டிய மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட நிலத்தை, எம்எஸ்எம்இ(சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள்) திட்டத்தின் கீழ், பாபா ராம்தேவின் பதஞ்சலி குழும நிறுவனத்திற்கு ஒதுக்கியுள்ளது மராட்டிய மாநில அரசு.

இந்த நிலத்தின் மொத்த அளவு 400 ஏக்கர்கள். இந்த திட்டத்தின் கீழ் துவங்கப்படும் நிறுவனத்திற்கு பல சலுகைகள் உண்டு. 100% பத்திரப்பதிவு கட்டணச் சலுகை, மின் கட்டண சலுகை மற்றும் ஜிஎஸ்டி -யில் திரும்ப செலுத்தல் சலுகை உள்ளிட்ட பல சலுகைகள் உண்டு.

முந்தைய மத்திய காங்கிரஸ் அரசில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த விலாஸ்ராவ் தேஷ்முக் கனரகத் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது, இந்த 400 ஏக்கர் நிலம் பெல் நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், பெல் நிறுவனத்தில் பிளான்ட் இங்கே கொண்டுவரப்படவேயில்லை.

தற்போது, மிகப்பெரிய கார்பரேட் நிறுவனமான பதஞ்சலிக்கு இந்த நிலம் மிகப்பெரிய சலுகைகளுடன் கைமாறியுள்ளது. இந்த இடத்தில் எந்தமாதிரியான தொழிற்சாலையை பதஞ்சலி அமைக்கும் என்பது தெரியவில்லை என்றாலும், சோயாபீன் பதப்படுத்தும் தொழிற்சாலை, பதஞ்சலி சார்பாக அமைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.