சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் இடம்பெற்றிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கு ஜனவரி 31முதல் வேட்புமத்தாக்கல் நடைபெற்ற பிப்ரவரி 6ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அங்கு நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். அங்கு அரசியல் களம் அனல் பறக்கிறது.
இநத் நிலையில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் போசும்போது, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் தொடர்பாக கடந்த 3-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தோம். அந்த தொகுதியின் வாக்காளர் பட்டியலில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்திருந்தோம்.
அது தொடர்பாக ஆய்வு செய்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பட்டியல் அளிக்கும்படி கேட்டிருந்தனர். இதையடுத்து, தொகுதியில் உள்ள 238 வாக்குச்சாவடிகளிலும், வீடுவீடாக ஆய்வு மேற்கொண்டு, பட்டியல் தயாரித்து, தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளோம்.
இந்த தேர்தலில் ஆளும் திமுகஅரசு, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்வேறு அராஜகங்களை நிறைவேற்றி வருகிறது. எனவே, வாக்குப்பதிவு முறையாக நடைபெற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தொகுதியை துணை ராணுவ கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி னோம்.
இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் விசாரணை அறிக்கை கேட்டிருப்பதாகவும், அறிக்கை வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சி.வி.சண்முகம் கூறினார்.