டில்லி

றக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிக்கு அதிக விலை நிர்ணயம் செய்த அதானி அம்பானி குழுமம் உள்ளிட்ட 40 நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடத்துவதாக நிதித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

அனல்மின் நிலையங்களுக்காக நிலக்கரி இறக்குமதி செய்ததில் ஊழல்கள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.    கடந்த 2-3 ஆண்டுகளாக நிலக்கரி இறக்குமதி நிறுவனங்கள் 100%க்கு மேல் அதிக விலை வைத்து விற்றதாகவும் அதனால்  மின் கட்டணம் பெருமளவில் உயர்ந்ததாகவும் கூறப்பட்டது.   இந்த புகாரை நிதித்துறை இயக்குனரகம் விசாரித்தது.

தற்போது இந்த இயக்குனரகத்தின் அதிகாரி ஒருவர், “கடந்த இரு வருங்களாக  நடைபெற்ற நிலக்கரி இறக்குமதி குறித்து ஆராயப் பட்டது.  தனியார் நிறுவனங்களான தானி குழுமம், அம்பானி குழுமம், எஸ்ஸார் பவர், ஜே எஸ் டபில்ள்யூ ஸ்டீல்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும், தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட  பல அரசு நிறுவனங்களும்  செய்த இறக்குமதியின் ஆவணங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன.

இந்த ஆய்வின் முடிவில் சுமார் 40 நிறுவனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிக்கு அதிக விலை நிர்ணயம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   இந்த விவகாரத்தில் சுமார் ரூ.35000 கோடி முறைகேடு நடந்திருக்கலாம் என அறியப்பட்டுள்ளது.    இவ்வாறு அதிகம் நிர்ணயம் செய்யப்பட்ட விலையின் அடிப்படையில் இந்த நிறுவனங்களின் வெளிநாட்டு ஏஜண்டுகளிடம் இருந்து விலைப்புள்ளி (INVOICE) பெறப்பட்டுள்ளது.   இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் விசாரணை நடந்து வருகிறது”  எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மின் உற்பத்தி ஆர்வலர் ஒருவர், “இவ்வாறு அதிக விலைக்கு விற்கப்படும் நிலக்கரியினால் மின்கட்டணம் பெருமளவில் உயர்ந்துள்ளது.   அதாவது இறக்குமதி செய்யப்படும் ஒரு டன் நிலக்கரிக்கு ஒரு அமெரிக்க டாலர் அதிக விலை வைக்கப்பட்டாலும் அதனால் ஒரு மின் யூனிட் 4-5 பைசா அளவில் உயரும்.    ஆனால் இவர்கள் 100% அதிக விலை வைத்துள்ளனர்.  அதனால் ஒரு யூனிட்டுக்கு 80 பைசா முதல் 1 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது” எனக் கூறி உள்ளார்.