வாஷிங்டன்: ஜம்முகாஷ்மீரில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலைகள் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நெருக்கமான செனட் எம்பிக்கள் கடிதம் எழுதி கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.

வரும் 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.  2 நாள்களும் குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவுள்ளார்.

அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு குஜராத் மாநில அரசும், இந்திய அரசும் தயாராகிவருகிறது. டிரம்ப்பின் வருகை இந்திய அரசியலில் மட்டுமல்ல உலக அரசியலிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந் நிலையில், ட்ரம்பின் இந்தியா வருகைக்கு முன்னதாக, அவருக்கு நெருக்கமான குடியரசுக் கட்சியின் லிண்ட்சே கிரஹாம் உட்பட 4 உயர்மட்ட அமெரிக்க எம்பிக்கள் கவலையை வெளியிட்டு உள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் அமெரிக்க செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில் ஜம்முகாஷ்மீர் நிலவரம், அங்குள்ள அரசியல் தலைவர்களுக்காக அமலில் உள்ள தடுப்புக்காவல்கள், காஷ்மீர் இணையதள தடைகள் பற்றி விரிவாக எழுதி இருக்கின்றனர். இது அங்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி இருப்பதாகவும் விளக்கி இருக்கின்றனர்.

சிஏஏ, என்ஆர்சி பற்றியும் அவர்கள் எழுதிய கடிதத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளனர். இந்த கடிதம் உலக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.