பெங்களூரு

புகழ் பெற்ற டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்ற 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டிசிஎஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் டாடா கசல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் கடந்த 3 வருடங்களில் 50000 பேருக்கு மேல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.   இவர்கள் அனைவரும் ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் பணியில் இணைந்துள்ளனர்.  இவர்களுக்கு அளிக்கப்பட்ட பணியை இவர்களால் சரிவர முடிக்க முடியாத நிலையிலிருந்துள்ளனர்.

இதையொட்டி நிறுவன அதிகாரிகள் இவர்களது திறமைகளைப் பரிசோதித்த போது  பணிக்கு ஏற்ற திறன் இல்லாமல் உள்ளது தெரிய வந்தது.  மேலும் விசாரணை செய்த போது இவர்களில் ஆயிரக்கணக்கானோர் லஞ்சம் அளித்து பணியில் சேர்ந்தது தெரிய வந்தது.  நிறுவன மேலதிகாரிகள் இது குறித்து மேலும் விசாரணை நடத்தினர்.

அப்போது டிசிஎஸ் நிறுவன தலைமை வேலைவாய்ப்பு அதிகாரி சக்ரவர்த்தி தாம் அந்த தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்று பலரைப் பணி அமர்த்தியதை ஒப்புக் கொண்டுள்ளார்.  இவருக்கு இந்த விவகாரத்தில் மேலும் மூவர் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்த நால்வரையும் நிறுவன தலைமை அதிகாரி பணி நீக்கம் செய்துள்ளார். மேலும் இவர்களுக்கு லஞ்சம் கொடுத்த வேலை தேடித்தரும் நிறுவனங்களும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.  டி சி எஸ் உயர் அதிகாரிகள் எந்தெந்த நிறுவனங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிவிக்க மறுத்துள்ளனர்.