5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில் பாஜக வெற்றிபெற்றுள்ள மூன்று மாநிலங்களிலும் அதன் முதலமைச்சர் யார் என்பதை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
தென் மாநிலங்களில் துடைத்தெறியப்பட்ட பாஜக மாநிலங்களில் அசுர வெற்றி பெற்றுள்ள போதும் உட்கட்சி மோதல் காரணமாக முதல்வர் யார் என்று அறிவிப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
ம.பி. மாநிலத்தைப் பொறுத்தவரை சிவராஜ் சிங் சவுகான், நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் படேல், கைலாஷ் விஜயவர்கியா ஆகியோர் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி அதிகரித்துள்ளது.
சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வராகும் முடிவில் உறுதியாக இருக்கும் நிலையில் மற்ற தலைவர்களை சமாளிக்கும் முயற்சியில் பாஜக தலைமை ஈடுபட்டுள்ளது.
தனது மத்திய அமைச்சர் பதவி மற்றும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ள நரேந்திர சிங் தோமர் தனது பங்கிற்கு முதல்வர் பதவி வேண்டும் என்று விடாப்பிடியாக முயற்சித்து வருகிறார்.
சிவராஜ் சிங் சவுகானுக்குப் பிறகு ஓபிசி பிரிவின் மிகப்பெரிய தலைவராக இருக்கும் பிரஹலாத் படேலுக்கு துணை முதல்வர் பதவி அல்லது தேர்தலுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்ட மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதேவேளையில், மால்வா – நிமர் பிராந்தியத்தின் மிகப்பெரும் அரசியல் தலைவராக உள்ள கைலாஷ் விஜய்வர்கியா-வும் போட்டியில் இருப்பதை அடுத்து பாஜக-வுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர் மற்றும் மாநில தலைவர் ஆகிய பதவிகள் யார் யாருக்கு என்ற சிக்கல் நீடித்து வரும் நிலையில் நரேந்திர சிங் தோமர் முதல்வராக பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்படி முதல்வர் பதவியை தோமருக்கு விட்டுக்கொடுக்க சிவராஜ் சிங் சவுகான் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவருக்கு பாஜக தேசிய தலைவர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது தேசிய தலைவராக உள்ள ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் பாஜக இந்த சமரச திட்டத்தை கையிலெடுத்துள்ளதாகத் தெரிகிறது.