சென்னை: தமிழத்தை தாக்கிய நிவர் புயலுக்கு 4 பேர் பலியான நிலையில், அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் நிவாரண உதவிகள் அறிவித்து உள்ளன. அதன்படி மாநில அரசு சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும்,  மத்தியஅரசு சார்பில் தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ள.

வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 25ம் தேதி இரவு புதுச்சேரி மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக  தமிழகத்தில் கடலூர் உள்பட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டது. சேதமடைந்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று சந்தித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளுதல் தெரிவித்தார். மேலும் நிவாரண உதவிகளும் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, நிவர்புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு மாநில அரசு சார்பில் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பில், “நிவர் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழக அரசு எடுத்த  முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக உயிர்ச் சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன. புயல் கரையைக் கடந்தபோது அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கன மழையினாலும் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிவர் புயல் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் நபர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு, குடும்பம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ஒரு கிலோ பருப்பும், சமையல் எண்ணெய்யும் வழங்க உத்தரவிட்டேன்.

நிவர் புயல் மற்றும் கன மழை காரணமாக இது வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின்  குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இப்புயலின்போது 61 மாடுகளும், 5 எருதுகளும், 65 கன்றுகளும், 114 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயும், எருது ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும், கன்று ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் வழங்கப்படும்.

நிவர் புயல் காரணமாக 302 குடிசை வீடுகள் முழுமையாகவும் 1,439 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும், 38 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 161 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும்.

நிவர் புயல் காரணமாக, 18 மாவட்டங்களில், 2,064 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலையில் விழுந்துள்ள மரங்களை மின் ரம்பங்கள் மூலம் வெட்டி, போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

பல்வேறு மாவட்டங்களில் 108 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 2,927 மின் கம்பங்கள் விழுந்துள்ளன. மின் வயர்கள் சேதமடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்து விழுந்ததனால் சேதமடைந்த மின்மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களைச் சீர் செய்யும் வகையில் மரங்களை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிவர் புயல் காரணமாக மக்களுக்கு எந்தவித தொற்று நோயும் ஏற்படாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என்றும்,  பொதுமக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் 1,220 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 275 நடமாடும் மருத்துவ முகாம்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது வரை சுமார் 85,331 நபர்கள் இம்மருத்துவ முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர். தேவையான மருந்து மற்றும் கிருமி நாசினிகள் கையிருப்பில் வைக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பன்முக நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை மேற்கொண்டு வருகிறது.

வேளச்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி, குடியிருப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, இப்பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரியத் திட்டங்களை வகுக்க அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதாரத்தை முறையாகக் கணக்கீடு செய்து, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும்,  பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையும் பெற்றுத் தரவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நேற்று இரவு நிவர் புயல் தொடர்பாக முதல்வர் எடப்பாடியுடன் விசாரித்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என உறுதி அளித்தவுடன், உயிரிழந்த 4 பேருக்கும், பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும்,  காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.