சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசு முறை பயணமாக திருவாரூர், நாகை செல்கிறார். நாளை (25ந்தேதி) மறைந்த முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் சொந்த ஊரான நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள அரசு பள்ளியில், காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைக்கிறார்.
அரசு பள்ளி மாணவர் களின் படிப்பை ஊக்குவிக்க வும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல்இடைநிற்றலை தவிர்கவும் காலை உணவு திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 1,14,095 மாணவர்களுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்துக்கு ரூ.33.56 கோடி செலவிட அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, கடந்த ஆண்டு (2022) அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி அன்று அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், 2023ம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் பிறந்தநாளை முட்னனிட்டு, மேலும் 500 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. சென்னையில் உள்ள பள்ளிகளில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து இந்த திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஆகஸ்டு 23ந்தேதி (நாளை மறுதினம்) தமிழ்நாடு முழுவதும் மீதமுள்ள 31,008 அரசுப் பள்ளிகளில் 1 – 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டப்படி பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அண்மையில் பல மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு அரசுத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனையிலும் ஈடுபட்டு வந்தார்.
இதையடுத்து, நாளை நான்கு நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
நாளை (ஆக.24-ம் தேதி) காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் முதல்வர், அங்கிருந்து நாகப்பட்டினம் சென்று இரவு தங்குகிறார்.
நாளை மறுதினம் ஆகட்ஸ் 25-ம் தேதி திருக்குவளையில் முதல்வரின் காலை சிற்றுண்டி விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
பிறகு, நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர், எம்.பி., எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
ஆகஸ்ட் 26-ம் தேதி முதல்வர் கள ஆய்வு திட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
ஆகஸ்ட் 27-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் சென்னை திரும்புகிறார்.