திருப்பதி: ஜனவரி மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க  4.6 லட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஜனவரி மாதம் ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைனில் நேற்று டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

ஆன்லைன் மூலமாக ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களை நேற்று வெளியிட்டது. இந்த டிக்கெட்டுகளை பெறும் பக்தர்கள் வரும் ஜனவரி மாதம் சுவாமியை தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.  காலை 9மணி அளவில்  டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சுமார் 40 நிமிடங்களில்,  4.60 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

ஜனவரி 1-ம் தேதி மற்றும் 13-ம் தேதியிலிருந்து 22-ம் தேதி வரை தினமும் 20 ஆயிரம் டிக்கெட்களும், ஜனவரி 2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையிலும், 23-ம் தேதியிலிருந்து 31-ம் தேதி வரையிலும் தினமும் 12 ஆயிரம் டிக்கெட்களும் நேற்று வெளியிடப்பட்டன. இதன்படி சுமார் 4.60 லட்சம் டிக்கெட்கள் வெறும் 40 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

கடந்த 23-ம் தேதி, காலை 9 மணியளவில் ஜனவரி 1,2 தேதிகளிலும், 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையிலும் மற்றும் 26-ம் தேதியிலும் 5500 சேவா டிக்கெட்களை தேவஸ்தானம் வெளியிட்டது.

இந்த டிக்கெட்டுக்களை பெற்றுள்ள பக்தர்கள் நேரில் குறிப்பிட்ட சேவாவில் பங்கேற்க முடியாவிட்டாலும், ரூ.300 தரிசனம் மூலம் சுவாமியை தரிசிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டதால், இந்த டிக்கெட்களும் உடனடியாக விற்று தீர்ந்தன.

ஜனவரி மாதம் முதல் தினமும் 5 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனிலும், தினமும் 5 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாகவும் கவுண்ட்டர்களிலும் வழங்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அலிபிரி சோதனைச் சாவடியை கடக்கும் முன், 48 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததற்கான ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ், கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் ஆகியவற்றை உடன் கொண்டு வந்து அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும்.
மேற்கண்ட சான்றிதழ்களை காண்பித்தவர்கள் மட்டுமே திருமலைக்கு செல்லவும், ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.