லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்றத்துக்கு ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், நாளை  (20ந்தேதி) 3-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் நடைபெற உள்ள  58 தொகுதிகளில் 245 கோடீஸ்வரர்களுடன் 135 கிரிமினல்களும் போட்டியிடுவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில்  தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே பிப்ரவரி 7, 10 ஆகிய தேதிகளில் சில மாவட்டங்களில் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், நாளை 3வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

உ.பி.யில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதே வேளையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள யோகி தலைமையிலான பாஜகவும் போராடி வருகிறது. இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சி, யோகி அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்கள், எம்எல்ஏக்களை தனது கட்சிக்கு அழைத்து வந்து, யோகிக்கு பயத்தை காட்டி உள்ளது. மேலும் பகுஜன் சமாஜ் கட்சியும் தனித்து போட்டியிடுவதால் 4முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், 3-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் மொத்தம் 623 வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். 26 தொகுதிகள் வன்முறை அபாயம் கொண்டதாக சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

இந்த 59 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில்  135 பேர் கிரிமினல்கள். அதன்படி,  சமாஜ்வாதி கட்சியின் 21, பாஜகவின் 20, பகுஜன் சமாஜ் கட்சியின் 18, ஆம் ஆத்மியின் 11, காங்கிரஸின் 10 வேட்பாளர்கள் தங்கள் மீது அபாயகரமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.,

இதுமட்டுமின்றி சமாஜ்வாதி கட்சியின் 58 வேட்பாளர்களில் 30 பேர்; பாஜகவின் 55 வேட்பாளர்களில் 25 பேர்; பகுஜன் சமாஜ் கட்சியின் 59 வேட்பாளர்களில் 23 பேர்; காங்கிரஸ் கட்சியின் 56 வேட்பாளர்களில் 20 பேர்; ஆம் ஆத்மி கட்சியின் 49 வேட்பாளர்களில் 11 பேர் தங்கள் மீது  சாதாரணமான கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தங்களது பிரம்மான பத்திரங்களில் தெரிவித்துள்ளனர்.

கிரிமினல்களை எதிர்கொள்ள 245 கோடீஸ்வரர்களும் களத்தில் உள்ளனர். மொத்த முள்ள 623 வேட்பாளர்களில் 39% பேர் அதாவது 245 பேர் கோடீஸ்வரர்கள் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  அதன்படி  சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களில் 52 பேர் பெரும் கோடீஸ்வர்கள்., பாஜகவின் 48 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியின் 46 பேரும், காங்கிரஸின் 29 பேரும், ஆம் ஆத்மியின் 18 வேட்பாளர்களும், ரூ1 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.