மும்பை: தாக்கரே குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை தற்போது தேர்தலில் போட்டியிட உள்ளது. உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே மராட்டிய சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிவசேனை கட்சியைத் தொடங்கிய பால்தாக்கரே மற்றும் அவருக்கு அடுத்து கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்ற உத்தவ் தாக்கரே ஆகியோர் தேர்தல்களில் போட்டியிடவில்லை மற்றும் அரசுப் பதவிகளையும் வகிக்கவில்லை.
ஆனால், தற்போது மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே இந்தாண்டு மராட்டியத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆதித்யா தாக்கரேவுக்கு சிவசேனை சார்பில் பாரதீய ஜனதாவிடம் துணை முதல்வர் பதவி கேட்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் கசிந்தன. அதேசமயம், பா.ஜ. – சிவசேனை கட்சிகளுக்கு இடையே இன்னும் தொகுதி உடன்பாடு முடிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், தான் உறுதியாக போட்டியிட உள்ள சில தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களையும் சிவசேனை வெளியிட்டது.