குவகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் பிரமபுத்திரா நதிக்கரையில் அமைந்த ஒரு சிவன்கோயிலை முஸ்லீம் குடும்பப் பரம்பரை ஒன்று கடந்த 500 ஆண்டுகளாக பராமரித்து வருகிறது.

இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து கூறப்படுவதாவது; தற்போது இக்கோயிலை பராமரிக்கும் பணியை செய்பவர் மோதிபர் ரஹ்மான் என்ற 73 வயது முதியவர். கோயிலை சுத்தம் செய்வது, விளக்கேற்றுவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் அவர் தினமும் செய்துவருகிறார்.

இவர் சிவனை ‘நானா’ என அன்புடன் அழைக்கிறார். அவர் கூறியதாவது, “என் மூதாதையர் ஒருவரின் கனவில் சிவன் தோன்றி இப்பணியை செய்யுமாறு கேட்டுக் கொண்டதன்படி, நாங்கள் பரம்பரை பரம்பரையாக இதை மேற்கொண்டு வருகிறோம்.

நாங்கள் கடந்த 500 ஆண்டுகளாக இப்பணியை மேற்கொண்டு வருகிறோம். என் ‘நானா’ தூய்மையை விரும்புபவர் என்பதால் கோயிலை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்வேன். என் காலத்திற்கு பிறகு இப்பணியை என் மகன்கள் மேற்கொள்வர்” என்றார் அவர்.

இந்து – முஸ்லீம் நல்லிணக்கத்திற்கு நாட்டில் பரவியுள்ள எத்தனையோ எடுத்துக்காட்டுகளில் இதுஒரு சுவாரஸ்யமான மற்றும் முக்கியமான எடுத்துக்காட்டு!