சென்னை:
மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில், இன்று அவரது நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சாலையோரங்களில் அவரது படத்தை அலங்கரித்து வைத்து, நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜெ.நினைவுநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதிமுக சார்பில் சென்னை அண்ணா சாலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரை நோக்கி அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர்.
பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. ஓபிஎஸ் உறுதிமொழியை வாசிக்க அதிமுகவினர் அதை திருப்பக்கூறி உறுதிமொழி எடுத்தனர். இதையடுத்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.