சென்னை:
39 – வது சென்னை புத்தகக் கண்காட்சி நாளை தொடங்கி ஜூன் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தால் சென்னையில் புத்தக கண்காட்சியை ஜனவரி மாதத்தில் நடத்தப்படும். கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் 39-வது புத்தக கண்காட்சி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து நாளை தொடங்கி ஜூன் 13 ம் தேதி வரை தீவுத்திடலில் புத்தகக் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் பொருளாளர் ஒளிவண்ணன் கூறியதாவது:
“இந்தப் புத்தகக் கண்காட்சியில் சுமார் 700 அரங்குகள் இடம்பெற உள்ளன.
புலம் பெயர்ந்த தமிழர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஆண்டு சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்கென்று தனியாக ஒரு அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அந்த அரங்கில் காட்சிப்படுத்தப்படும்.
மேலும், அந்த எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல், விவாதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
கண்காட்சியில் சுமார் 6 ஆயிரம் புதிய புத்தகங்களும், சுமார் ஒரு லட்சம் நூல்களும் இடம் பெறவுள்ளன. பார்வைத் திறன் குறைபாடு உள்ளர்களுக்கான பிரெய்லி நூல்கள் அடங்கிய சிறப்பு அரங்கமும் அமைக்கப்பட உள்ளது.
புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் 10 ரூபாய். வார நாள்களில் பிற்பகல் 1 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.
மேலும் மாடித் தோட்டம் குறித்த அரங்கு, உணவுத் திருவிழா, ஓவியம், இசை, சார்ந்த போட்டிகளும் நடைபெறும்” என்று ஒளிவண்ணன் தெரிவித்தார்.