லண்டன்:

டிரக் கண்டெய்னரில் இருந்து 39 சடலங்களை பிரிட்டிஷ் போலீசார் கண்டெடுத்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கேரியாவைச் சேர்ந்த அந்த லாரி, கடந்த சனிக்கிழமையன்று பிரிட்டன் வந்து சேர்ந்திருக்கிறது. அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இருந்து வழக்கமாக கப்பல் சேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி அந்த டிரக் வந்திருக்கிறது.

கிழக்கு லண்டனில் கிரேஸ் என்ற பூங்கா அருகில் அந்த டிரக் வந்த போது பிடிபட்டிருக்கிறது. உள்ளே 39 சடலங்கள் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக எஸ்செக்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் 25 வயதுடைய லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை பற்றி போலீசார் கூறியிருப்பதாவது: இது மிகவும் எதிர்பாராத சம்பவம். கிட்டத்தட்ட பலர் தமது உயிரை இழந்துள்ளனர்.

இந்த லாரி பல்கேரியாவை சேர்ந்தது என்று நாங்கள் நம்புகிறோம். போலீஸ் கஸ்டடியில் அவரை வைத்திருக்கிறோம். இப்போதைக்கு எதையும் முழுமையாக சொல்ல முடியாது. இருப்பினும், என்ன நடந்தது என்பதை அவரிடம் விரிவாக விசாரித்து வருகிறோம் என்றனர்.

39 சடலங்கள் டிரக் கண்டெய்னரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

இது ஒரு மோசமான சம்பவம். திகைத்து போயிருக்கிறேன். இந்த சம்பவம் குறித்து, போலீசாரிடம் தொடர்ந்து தகவல்களை கேட்டு வருகிறேன். அரசு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட போலீசாரிடம் இணைந்து என்ன நடந்தது என்பதை உன்னிப்பாக விசாரித்து வருகின்றனர்.

எனது எண்ணம் எல்லாம் உயிரிழந்தவர்கள் பற்றியும், அவர்களின் அன்புக்குரியவர்களை பற்றியுமானதாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். ஒரே சமயத்தில் டிரக் கண்டெய்னரில் 39 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், பிரிட்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.