ஹாங்காங்கில் கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தின் பயனாக, சர்ச்சைக்குரிய மசோதாவை திரும்பப் பெற ஹாங்காங் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில்கட்டுப்பாட்டில், தன்னாட்சி பெற்ற நாடாக செயல்பட்டு வரும் ஹாங்காங்கில் குற்றச்செயல் தொடர்பாக புதிய மசோதான அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு கடந்த 4 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வன்முறை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய மசோதாவை திரும்ப பெற முடிவு செய்துள்ளதாகவும், போராட்டங்களைத் தூண்டிய அந்த மசோதாவை ஹாங்காங் அதிகாரிகள் முறையாக திரும்பப் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது ஹாங்காங். சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன. இந்த நிலையில், ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் சட்டத் திருத்த மசோதாவை கடந்த ஜூன் மாதம் ஹாங்காங் கொண்டு வந்தது.

இந்த மசோதாவுக்கு  பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், ஹாங்காங் அரசு மசோதாவை நிறைவேற்ற முயற்சி செய்ததால், அரசுக்கு எதிராக  ஹாங்காங்கில் தீவிரப் போராட்டங்கள் நடந்தன.

லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு புதிய சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தின்போது வன்முறை நிகழ்வுகளும் ஏற்பட்டன. கைதும் செய்யப்பட்டனர்.  4 மாதங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

ஆனால், இதுகுறித்து கூறிய சீனா, ஹாங்காங்கில் ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறை நடப்பதாகவும், இது எந்த நாட்டவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதில் வெளிநாட்டுப் படைகளும், சர்வதேச ஊடகங்களும் அரசியல் நெருக்கடியைத் தூண்டுகின்றன’’ என்று குற்றம் சாட்டியிருந்தது.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய மசோதாவை திரும்ப பெற ஹாங்காங் அரசு முடிவு செய்துள்ளது.