சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டார். அதில், மக்கள் நலனை காக்கும் 36 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து, ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் திமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதியிலும் களமிறங்கும் நிலையில், திமுக மட்டும் 21 தொகுதியில் போட்டியிடுகிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது.
முன்னதாக, திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களது குரல்களையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தது. இதனைத் தொடர்ந்து இன்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
திமுக தேர்தல் அறிக்கையை ஆங்கிலத்தில் காண, கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்
DMK_Election_Manifesto_Eng_20-03-24
இதில், மக்கள் நலனை பாதுகாக்கும் வகையில் 36 வாக்குறுதிகள் வழங்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1. மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும்.
2. ஆளுநர் பதவி தேவையில்லை என்றாலும், அப்பதவி இருக்கும் வரையில் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனை பெற்றே ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.
3. உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.
4. புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும்.
5. ஒன்றிய அரசுப் பணிகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.
6. ஒன்றிய அரசு அலுவகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.
7. அனைத்து மாநில மொழிகளது வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.
8. திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
9. தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்க்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.
10. ரயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
11. புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.
12. நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.
13. நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
14. இந்தியா முழுவதும் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர்உரிமைத் தொகை ரூபாய்.1000/ வழங்கப்படும்.
15. தமிழ்நாட்டிற்கு ‘ நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
16. மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக்கு குழு அமைக்கப்படும்.
17. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்
18. பா.ஜ.க அரசின் தொழிலாளர் நல விரோத சட்டங்கள் மறு சீரமைப்பு செய்யப்படும்.
19. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
20. வங்கிகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லாத போது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.
21. குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும்.
22. ஒன்றிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
23. ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
24. வேளாண் விளைபொருள்களுக்கு மொத்த உற்பத்திச் செலவு பிளஸ் 50 சதவீதம் என்பதை வலியுறுத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் (MSP) செய்யப்படும்.
25. இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விகடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
26. விமானக் கட்டணம் நிர்ணயிப்பது முறைப்படுத்தப்படும்.
27. LPG சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் விலை –ரூ.75 மற்றும் டீசல் விலை ரூ.65-ஆக குறைக்கப்படும்.
28. பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது.
29. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து150-ஆகவும், ஊதியத்தை ரூ.400-ஆகவும் உயர்த்தப்படும்.
30. ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களானIIT, IIM, IISc, IIARI ஆகியவை தமிழ்நாட்டில்புதியதாக அமைக்கப்படும்.
31. பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்படும்.
32. ஒரே நாடு -ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.
33 .மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக் கடனாக 4 லட்சம் வரை வழங்கப்படும்.
34. ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.
35. இசுலாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் மேம்பாடு குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.
36. சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும்.
திமுக வெளியிட்டுள்ள முழுமையான தேர்தல் அறிக்கையை தமிழில் காண, கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்