நாளை முதல் 34 வகையான கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி: சலூன்களுக்கு 'நோ' பர்மிஷன்

Must read

சென்னை: ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் தமிழகத்தில் 34 வகையான கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இந் நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தி இருக்கிறது. இந்த கட்டுப்பாடுகள் தளர்வு நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, நாளை முதல் எந்தெந்த கடைகள் செயல்படலாம் என்பது குறித்து தமிழக அரசு விரிவாக விளக்கம் அளித்துள்ளது.  34 வகையான கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 24.03.2020 முதல் அமலில் இருந்து வருகின்றது. கடந்த 02.05.2020 அன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின் படியும், பெருநகர சென்னை காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) பல செயல்பாடுகள் / பணிகள், 11.05.2020 திங்கட்கிழமை முதல் குறிப்பிடப்பட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுவது தொடர்பாக 09.05.2020 அன்று பத்திரிக்கை செய்தி வெளியீடு எண். 326 வெளியிடப்பட்டது.  அதில் பிற தனிக்கடைகள் பிரிவில் கீழ்க்கண்ட கடைகள் திறக்கலாம். அதன் விபரம் பின்வருமாறு :

1)    டீக்கடைகள் (பார்சல் மட்டும்)
2)    பேக்கரிகள் (பார்சல் மட்டும்)
3)    உணவகங்கள் (பார்சல் மட்டும்)
4)    பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்
5)    கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்
6)    சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்
7)    மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
8)    மொபைல் போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்
9)    கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்
10)    வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்
11)    மோட்டார் இயந்திரங்கள்  மற்றும் பழுது நீக்கும் கடைகள்
12)    கண்கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்
13)    சிறிய நகைக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை)
14)    சிறிய ஜவுளிக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை) – ஊரக பகுதிகளில் மட்டும்
15)    மிக்ஸி,  கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்
16)    டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்
17)    பெட்டி கடைகள்
18)    பர்னிச்சர்  கடைகள்
19)    சாலையோர தள்ளுவண்டி கடைகள்
20)    உலர் சலவையகங்கள்
21)    கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்
22)    லாரி புக்கிங் சர்வீஸ்
23)    ஜெராக்ஸ் கடைகள்
24)    இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்
25)    இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன  பழுது நீக்கும் கடைகள்
26)    நாட்டு மருந்து விற்பனை கடைகள்
27)    விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்
28)    டைல்ஸ் கடைகள்
29)    பெயிண்ட் கடைகள்
30)    எலக்ட்ரிகல்  கடைகள்
31)    ஆட்டோமொபைல் உதிரி  பாகங்கள் விற்பனை கடைகள்
32)    நர்சரி கார்டன்கள்
33)    மரக்கடைகள் மற்றும் பிளைவுட்
34)    மரம் அறுக்கும் கடைகள்
(முடிதிருத்தும் நிலையங்கள் (சலூன்கள் ), ஸ்பா மற்றும்  பியூட்டி பார்லர்கள் இயங்ககூடாது என்று தெரிவிக்கப்படுகின்றது.)
ஊரடங்கு தளர்வின் போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகள் / கடைகள் தொடர்ந்து இயங்கும். மேலும் கொரோனா நோய்த் தொற்று தன்மையைப் பொறுத்து வருங்காலங்களில் பல்வேறு  பணிகளுக்கு / கடைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படும்.

மேற்குறிப்பிட்டுள்ள கடைகளின் உரிமையாளர்கள், குளிர்சாதன வசதி இருந்தால்  அதை  இயக்காமல்,  கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனி நபர் இடைவெளியினை பின்பற்ற அறிவுறுத்துவதோடு, கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையாளர்களும், காவல் துறையினர், அரசால் அறிவுறுத்தப்பட்ட மேற்சொன்ன கடைகள் / நிறுவனங்களில், பணியாளர்கள் / வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை  உறுதி செய்யவும், தனிநபர் இடைவெளியை பின்பற்றப்படுவதையும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தி பணிபுரிவதையும், பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதையும், கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொது மக்களும், தனியார் நிறுவனங்களும் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article