கோராக்பூர்:

கோராக்பூர் பிஆர்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் கடந்த 3 தினங்களில் மேலும் 34 குழந்தைகள் இறந்துள்ளனர்.

உ.பி. மாநிலம் கோராக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவமனையில் கடந்த வாரம் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக 64 குழந்தைகள் இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மேலும் 34 குழந்தைகள் இறந்துள்ளனர். திங்கள் கிழமை மட்டும் 24 குழந்தைகள் இறந்துள்ளனர். மூளை வீக்கம் உள்ளிட்ட 3 சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 24 குழந்தைகள் இறந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல் செவ்வாய் அன்று 10 குழந்தைகள் இறந்துள்ளது.

இச்சம்பத்தை தொடர்ந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் மருத்துவமனையை பார்வையிட்டு குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், மாவட்ட கலெக்டர் ராஜீவ் ராவ்த்தலா மூலம் ரகசிய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மாநில அரசு உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இதை கல்லூரி முதல்வர் பிகே சிங் மறுத்துள்ளார். எங்களிடம் சில தகவல்கள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘இந்த பகுதி முழுவதும் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது. வெளி மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட குழந்தைகள் மட்டுமே இங்கு அழைத்து வரப்படுகிறார்கள். இதில் பிறந்த குழந்தைகளும் அடக்கம்’’ என்றார்.

இந்த மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் கபீல் கான் என்பவர்கள் சம்பவத்தன்று தனது சொந்த பணத்தில் சிலிண்டர்களை வரவழைத்து குழந்தைகளுக்கு ஆக்சிஜன் கொடுத்து பல உயிர்களை காப்பாற்றினார். இவரை பணி இடைநீக்கம் செய்தது தொடர்பாக கல்லூரி முதல்வர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.