காத்மண்டு: சுமார் 8,848 மீட்டர் (கிட்டத்தட்ட 9 கி.மீ) உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைய வேண்டுமென்பது, உலகிலுள்ள ஒவ்வொரு மலையேற்ற வீரரின் கனவாகவே இருக்கும்.

எனவே, மோசமான பருவநிலை நிலவும் காலத்தை தவிர்த்து, இதர நாட்களிலெல்லாம் எப்போதும் ஒரு கூட்டம் எவரெஸ்டில் ஏறிக்கொண்டே இருக்கும். இது ஒருபுறமிருக்க, எவரெஸ்ட் சிகரம் கடந்த 90 ஆண்டுகளில் சுமார் 300 பேரை பலிகொண்டுள்ளது என்ற மற்றொரு அச்சுறுத்தும் உண்மையையும் நாம் கட்டாயம் தவிர்த்துவிட முடியாதுதான்.

இந்த 2019ம் ஆண்டில் இதுவரையான மாதங்களில் மட்டும் 11 பேர் இறந்திருக்கிறார்கள். மிக அதிகபட்சமாக 2010 – 2019 காலகட்டத்தில்தான் 80 பேர் இறந்திருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.

கடந்த 1940ம் ஆண்டுகளில் மட்டும்தான் ஒரு உயிரிழப்புக்கூட நிகழவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடும் சோர்வு, உயரமான பனிமலையில் ஏற்படும் நோய்கள், கீழே தவறி விழுதல், தோலுறைவு, பனிச்சரிவு மற்றும் அனுபவமின்மை போன்றவை ஆட்கள் பலியாவதற்கான முக்கிய காரணிகளாக திகழ்கின்றன.