மதுரை:
மதுரை அருகே பள்ளி ஒன்றில் சத்துணவு சாப்பிட்ட 30- க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை அருகே அப்பன் திருப்பதி அடுத்துள்ள வெள்ளியகுன்றம் என்ற கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
வழக்கம்போல் இன்று பிற்பகல் இங்கு மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு வாந்தியும் ஏற்பட்டது. இதனையடுத்து, உணவு தருவது நிறுத்தப்பட்டது.
மயங்கி விழுந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஆசிரியர்கள் அனுமதித்தனர்.
மாணவர்களின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். மாணவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அறிந்த பெற்றோர்கள், விரைந்து வந்தனர். சிகிச்சை முடிந்ததும் தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று விசாரித்தனர். உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர். எனினும், மாணவர்கள் மயக்கமடைந்ததற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.